2024 துலீப் ட்ரோபி தொடர் செப்டம்பர் 5 துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியும், அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும் மோதின.
இந்தப் போட்டியில், இந்தியா பி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
டாஸ் வென்று சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து, முஷீர் கானின் (181 ரன்கள்) அபார ஆட்டத்தால் இந்தியா பி அணி முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் சேர்த்தது. இந்தியா ஏ அணிக்காக ஆகாஷ் தீப் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு எதிராக மிரட்டலாக பந்துவீசி, முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் சைனி தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர். இதன் காரணமாக, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய இந்தியா பி அணிக்கு எதிராக, ஆகாஷ் தீப் தனது மிரட்டலான பந்துவீச்சை தொடர்ந்தார். அவர் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்த, இந்தியா பி அணி 184 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 61 ரன்களும், சர்ஃபராஸ் கான் 46 ரன்களும் சேர்த்தனர்.
275 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி கடைசி இன்னிங்ஸில் களமிறங்கியது. துவக்கத்தில் தடுமாறிய அந்த அணிக்காக, கே.எல்.ராகுல் 57 ரன்கள் சேர்த்தும், ஆகாஷ் தீப் 43 ரன்கள் சேர்த்தும் கடைசி வரை போராடியபோதும், இந்தியா ஏ அணி 198 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. யஷ் தயாள் 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதன்மூலம், இந்தியா பி அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், கடைசி இன்னிங்ஸில் இந்தியா ஏ அணிக்காக குல்தீப் யாதவ் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் அவரை நட்பு ரீதியாக சீண்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
குல்தீப் யாதவ் பேட்டிங்கின்போது சிங்கிள்களை தடுக்க ஃபீல்டர்களை ரிஷப் பண்ட் அருகில் அழைத்தார். அப்போது, “நான் சிங்கிள் எடுக்க மாட்டேன்”, என குல்தீப் யாதவ் கூறினார். அதற்கு, “அம்மா சத்தியமா சொல்லு, சிங்கிள் எடுக்க மாட்டேன்-னு”, என ரிஷப் பண்ட் பதில் அளித்தார்.
https://x.com/riseup_pant17/status/1832722478600261776
சில ஓவர்களுக்கு பின் மீண்டும் குல்தீப் யாதவை சீண்டிய பண்ட், முஷீர் கான் வீசிய ஓவரின் கடைசி பந்தில் குல்தீப் யாதவுக்கு சிங்கிள் கொடுக்கும்படி கேட்டார். “அவரை சிங்கிள் எடுக்க விடுங்க. நம்ம கிட்ட ஒரு செம்ம பிளான் இருக்கு”, என பண்ட் தெரிவித்தார். அதற்கு, “ஏன் இவ்வளவு கவலைப்படுற?”, என குல்தீப் யாதவ் கேள்வி எழுப்பினார். அதற்கு, “அப்போ சீக்கிரம் அவுட் ஆகு”, என ரிஷப் பண்ட் பதில் அளித்தார்.
https://x.com/wordofshekhawat/status/1832724865633104068
தற்போது இந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
மகாவிஷ்ணு கைது : சர்ச்சை வீடியோ நீக்கம்!
Paralympics 2024: 29 பதக்கங்களுடன் இந்தியா வரலாற்று சாதனை – முழு பட்டியல்!