2023 ஒருநாள் உலகக்கோப்பை, இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த போட்டி, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில், வரும் அக்டோபர் 8 அன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.
பயிற்சி ஆட்டங்களுக்காக திருவனந்தபுரம் சென்றிருந்த இந்திய அணி, தனது முதல் போட்டிக்காக சென்னை வந்ததில் இருந்தே, சுப்மன் கில்லுக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததாகவும்,
பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதாகவும், பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியிருப்பதாக தகவல் வெளியானது.
மேலும், வெள்ளிக்கிழமையான அக்டோபர் 6 அன்று, சுப்மன் கில்லுக்கு மீண்டும் ஒரு முறை பரிசோதனை மேற்கொண்டு,
அதன் பிறகே அவர் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ நிர்வாகி கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சுப்மன் கில்லின் உடல்நிலை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் தற்போது நலமுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ள டிராவிட்,
“நம்மிடம் இன்னும் ஒருநாளுக்கும் அதிகமான நேரம் உள்ளது. மருத்துவ குழுவின் அறிவுறுத்தலின்படி, பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்”, என தெரிவித்துள்ளார்.
சுப்மன் கில் இல்லை என்றால்..?
ஒருவேளை உடல்நலம் காரணமாக சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் இந்த போட்டியில் ரோகித் சர்மாவுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் எதிர்பார்க்கப்படும் ‘பிளேயிங் 11’ என்ன?
ரோகித் சர்மா, சுப்மன்/இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தொகுதியை குறைக்க சதிச்செயல்: முதல்வர் ஸ்டாலின்
லோகேஷ் கனகராஜ் தடை செய்யப்பட வேண்டும்..! கொந்தளித்த கார்ட்டூனிஸ்ட்..!