அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், லீக் சுற்று ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்தியா 7 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
15 பேர் கொண்ட இந்திய அணியுடன், சுப்மன் கில், அவேஷ் கான், கலீல் அகமது மற்றும் ரின்கு சிங் ஆகிய 4 பேர் ரிசர்வ் வீரர்களாக பயணித்தனர்.
இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டங்களுக்கு முன்பாக, இந்த 4 பேரில் சுப்மன் கில் மற்றும் அவேஷ் கான் ஆகிய 2 பேரை அணியில் இருந்து விடுவிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் இந்தியாவுக்கு திரும்பவுள்ளனர்.
இப்படியான சூழலில், சுப்மன் கில்லின் ஒழுக்கமற்ற செயல்கள் காரணமாக, அவர் மீது ரோகித் சர்மாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால், கில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்த தகவல்கள் அனைத்துமே வெறும் வதந்தி என நிராகரித்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், “துவக்கத்தில் இருந்தே இதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. நாங்கள் அமெரிக்காவுக்கு வரும்போது, எங்களுடன் 4 வீரர்கள் வருவார்கள். பின் 2 வீரர்கள் விடுவிக்கப்பட்டு, மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும்போது 2 வீரர்கள் எங்களுடன் பயணிப்பார்கள். இது அணி தேர்வு செய்யப்பட்டபோதே எடுக்கப்பட்ட முடிவு. தற்போது, நாங்கள் அதை பின்பற்றுகிறோம்”, என தெரிவித்திருந்தார்.
மேலும், இவ்வாறு வதந்திகள் பரப்புவோர்களை கேலி செய்யும் வகையில், ரோகித் சர்மா மற்றும் அவரது மகள் சமைராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த சுப்மன் கில், “நானும் சமைராவும் ரோகித் சர்மாவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்கிறோம்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…