ஆப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் இன்று (ஜூன் 27) தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதியது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் போன்ற பலம் வாய்ந்த அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.
இதனால், இம்முறை ஆப்கானிஸ்தான் இறுதி போட்டி வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தென்னாப்பிரிக்க அணி சுக்குநூறாக உடைத்துள்ளது. டிரிண்டாட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, 56 ரன்களில் 11.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா சென்றிருந்தாலும் கூட இந்த போட்டியில் பெரிய ரன்களை அடித்து சுவாரசியமாக மாற்றி இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி மீது தவறு இல்லை என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாகன் பேசியதாவது, “திங்கட்கிழமை சென்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதன் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் அரை இறுதி போட்டியில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் அணி டிரிண்டாட் சென்றது.
ஆனால் அவர்கள் அங்கு செல்வதற்கான விமானம் 4 மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது. எனவே ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஓய்வு எடுக்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் நேரம் இல்லை. இதன் காரணமாக தான் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு உரிய மரியாதையை ஐசிசி செய்யவில்லை என்று நான் நினைக்கின்றேன்” என்று வாகன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மைக்கேல் வாகனின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஐசிசியின் மட்டமான அட்டவணை தயாரிப்புதான் இதற்கு காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடேங்கப்பா… வைரலாகும் ஆனந்த்-ராதிகா திருமண அழைப்பிதழ் வீடியோ!
“ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்” – உதயநிதி குட் நியூஸ்!