16 வது ஐ.பி.எல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிக பிரமாண்டமாக வாண வேடிக்கை , ஆடல் , பாடலுடன் தொடங்கியது. இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் கோப்பையை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஐ.பி.எல் போட்டியின் போதும் கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்கும் போதும் சரி பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்கும் போதும் சரி ‘சியர்லீடர்ஸ்’என்று அழைக்கப்படும் உற்சாக அழகிகளின் ஆட்டம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
அப்படி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் இந்த சியர்லீடர்ஸ் யார்? இவர்களின் சம்பளம் என்ன? இவர்களுக்கான தகுதி என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்;
ஐ.பி.எல் மட்டுமின்றி உலகில் விளையாடப்படும் பல்வேறு போட்டிகளிலும் ’சியர்லீடர்ஸ்’ என்று அழைக்கப்படும் இவர்களின் உற்சாக நடனம் இடம்பெறுகிறது.
இந்தியாவில் முதன் முதலில் ஐ.பி.எல் போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்த , அமெரிக்காவில் புகழ்பெற்ற ‘சியர்லீடர்ஸ்’ டீமான ‘வாசிங்டன் ரெட்ஸ்கின்ஸ்’ டீமின் உற்சாக அழகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளராக இருந்த விஜய் மல்லையாவின் பங்களிப்பு இதில் முக்கியமாக அப்போது பார்க்கப்பட்டது.
இதனிடையே, இந்த விவகாரம் அப்போது பெரும் விவாதத்தை கிளப்பியது. இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்ற குரல்களும் எழுந்தன. அதே நேரம் ரசிகர்களிடம் ’சியர்லீடர்ஸ்’ன் வரவேற்பு தொடர்ந்து அதிகரிக்கவே மற்ற அணிகளும் தங்கள் அணிகளுக்கான’சியர்லீடர்ஸ்’உற்சாக அழகிகளை களமிறக்கியது.
நடனம் மட்டுமல்லாது, உயிருக்கே ஆபத்தான சில ஸ்டண்டுகளையும் செய்யக் கூடிய இவர்களது பணி, பல நேரங்களில் இவர்களுக்குக் கடுமையான காயங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய சூழலில் புரஃபஷனல்கள் மட்டுமல்லாது அமெச்சூர்களாகவும் உலக அளவில் சியர்லீடர்களுக்கென லட்சக்கணக்கான குழுக்கள் இயங்கி வருகின்றன.
ஐ.பி.எல் போட்டிகளின் போது இவர்கள் ஆடுவதற்கென மைதானங்களில் பிரத்யேகமான மேடை அமைக்கப்பட்டிருக்கும். இவர்களின் ஆடைகள் பெரும்பாலும் அந்தந்த அணிகளின் ஜெர்ஸிகளை ஒட்டியே வடிவமைக்கப்பட்டிருக்கும்.
சியர்லீடர்ஸ்-ன் அழகிய நடை மற்றும் நடனத்தால், கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்திருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன்வசப்படுத்துகிறார்கள்.
சம்பளம் எவ்வளவு?
இவர்கள் இல்லாத இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க இன்று பலரும் விரும்புவதில்லை. அந்த அளவுக்கு சியர் லீடர்ஸ் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குள் தடம்பதித்துவிட்டார்கள். ஒவ்வொரு அணிக்கும் ’சியர் லீடர்ஸ்’ ஒரு போட்டிக்கு ரூ.14,000 முதல் ரூ.17,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். அதிகபட்சமாக கொல்கத்தா அணி சியர்லீடர்ஸ்-களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.24,000 வழங்குகிறது.

இவர்களின் செயல்திறன் சிறப்பாக இருந்தால் மற்றும் இவர்களின் அணி போட்டியில் வெற்றி பெற்றால் இந்த உற்சாக அழகிகளுக்கு போனஸ் தொகை வழங்கப்படும் . சம்பளம் தவிர, அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் போது தங்குமிடம், தினசரி உணவு மற்றும் பிற வசதிகள் போன்ற சலுகைகளையும் பெறுகிறார்கள்.
இவர்களுக்கான தகுதி என்ன?
’சியர் லீடர்ஸ்’ உற்சாக அழகிகள் நடனம், மாடலிங் ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் ஒரு குழுவாக ஆடிஷன் செய்தால் அது ஒரு பிளஸ் என்று கருதப்படுகிறது. ஐ.பி.எல் சியர் லீடர்ஸ் தேர்வு நேர்காணல்கள் மற்றும் சில தேர்வுகளை கொண்டுள்ளது. இவர்கள் ஐ.பி.எல் சியர் லீடர்ஸூக்கான பங்கிற்கு ஆடிஷன் செய்யும்போது மிகவும் தனித்துவமிக்க திறமையாளராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டியில் உள்ள பெரும்பாலான சியர் லீடர்ஸ்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். எப்போதும் சிரிப்பு, உற்சாகமான நடன அசைவுகள், இவைதான் சியர் லீடர்ஸ் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள். இவர்களின் ஆட்டத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உயிர் போகும் வலி: குஷ்பு எச்சரிக்கை!
சூடுபிடிக்கும் பல்வீர் சிங் விவகாரம்: விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்!