தினேஷ் கார்த்திக்கை விமர்சித்த கம்பீர்: பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

Published On:

| By christopher

டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வாகியுள்ள தினேஷ் கார்த்திக் குறித்து விமர்சித்த பாஜக எம்.பி. கவுதம் கம்பீருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இதற்கான அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கொடுத்தாக வேண்டும் என ஐசிசி உத்தரவிட்டிருந்த நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.

இதனைதொடர்ந்து இந்திய அணி தேர்வு குறித்து கிரிக்கெட் நிபுணர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்

இதில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆடி வரும் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக்கின் தேர்வு தான்.

ஏனென்றால் 2007ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த அவர், 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் உலககோப்பைக்கு அணியில் தேர்வாகி உள்ளார்.

இதனை தனது கனவு நனவான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதனால், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளையில், அணித்தேர்வில் தினேஷ் கார்த்திக்குடன் இளம் வீரரான ரிஷப் பண்ட்டும் தேர்வாகி உள்ளதால் இருவரில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே ப்ளேயிங் 11ல் வாய்ப்பு தர முடியும் என்ற நிலை உள்ளது. டி20 போட்டிகளில் சமீப காலமாக பண்ட் சொதப்பி வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்.

எனவே தினேஷ் கார்த்திக்கிற்கு தான் 11 பேர் கொண்ட இந்திய அணியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

dk fans attack gautham gambir critics

டி.கே வேண்டாம் – கம்பீர்

இந்நிலையில் தான் சர்ச்சை கருத்துகளுக்கு பேர் போன இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான கவுதம் கம்பீர், டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள தினேஷ் கார்த்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ”பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஒரே அணியில் விளையாட வைக்க முடியாது. அப்படி நடந்தால் 6வது பவுலர் இன்றி இந்தியா விளையாட வேண்டியிருக்கும்.

இல்லையென்றால் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாரேனும் ஒருவரை நீக்கிவிட்டு, பண்ட்-ஐ ஓப்பனிங்கில் ஆட வைக்கலாம் இதுதான் ஒரே வழி.

ஒருவருக்கு தான் வாய்ப்பு என்றால், பண்ட்-க்கு தான் தர வேண்டும். வெறும் 10-12 பந்துகள் மட்டும் பேட்டிங் ஆடும் வீரரை நீங்கள் எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்? நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றி தேடி கொடுக்கும் வீரர் தான் அணிக்கு தேவை.

தினேஷ் கார்த்திக் டாப் ஆர்டரில் இறங்கி விளையாட விரும்புவதில்லை. ஆனால் எந்த வரிசையிலும் பேட் செய்யும் தகுதி ரிஷப் பண்டுக்கு உள்ளது.

எனவே பண்ட் தான் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்க வேண்டும்” என கம்பீர் கூறியுள்ளார்.

கம்பீருக்கு வகுப்பெடுத்த ரசிகர்கள்!

இதனையடுத்து அவரது கருத்துக்கு எதிராகவும், தினேஷ் கார்த்திக்கு ஆதரவாகவும் சமூகவலை தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

dk fans attack gautham gambir critics

தோனியின் இடத்தால் பல ஆண்டுகளாக அணித் தேர்வின் போது விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான டிகே வின் இடம் எப்போதும் காத்திருப்பு பட்டியலில் இருந்து வந்தது.

dk fans attack gautham gambir critics

எனினும் அதற்கெல்லாம் சோர்ந்து போகாத தினேஷ் கார்த்திக் தொடர்ந்து ஐபில், டிஎன்பிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் இப்போது உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.

மேலும் தோனியை போலவே நெருக்கடி மிகுந்த நேரங்களில் எல்லாம் கூலாக ஆடி இந்திய அணிக்கு பலமுறை வெற்றியை தேடி தந்துள்ளார்.

அதே போல் வரவிருக்கும் உலகக்கோப்பையிலும் தனது கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜோரர் ஃபெடரர் ஓய்வு : உருகும் சர்வதேச ஜாம்பவான்கள்!

பரவும் காய்ச்சல்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel