கூடுதலாக 100 கிராம் எடை காரணமாக பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த இறுதி போட்டியில் இருந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று (ஆகஸ்ட் 7) அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடந்த 50 கிலோ மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் மகளிர் மல்யுத்தத்தில் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார். மேலும் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பதக்கமும் உறுதியானது.
இதனையடுத்து மக்களவைத் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஆளும் பாஜக எம்.பி.க்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து இன்று இரவு நடைபெற இருந்த இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாராவுடன் வினேஷ் போகத் மோத இருந்தார்.
இந்த நிலையில் மகளிர் மல்யுத்த 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், ”மகளிர் மல்யுத்த 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை இந்திய ஒலிம்பிக் சங்கம் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் குழுவினரின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் கூடுதல் எடையுடன் இருந்தார். இந்த நேரத்தில் மேலும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறும், இனி வர இருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்தவும் இந்திய அணி விரும்புகிறது” என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ள நிலையில், தடைகளை பல கடந்து உறுதியுடன் விளையாடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 100 கிராம் எடை கூடியதற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் போகத்திற்கு எதிராக சதி ஏதும் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
மேலும் ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவின் மூலம் மகளிர் 50 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனை சாரா தங்கப்பதக்கம் உறுதியானது. வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாத நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி மீதான ED வழக்கு… உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தொடர் சரிவு… தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!