சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், போட்டிகளின் தொலைக்காட்சி மற்றும் இணையதள ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை உட்படச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ஸ்டார் ஏலத்தில் வென்று கைப்பற்றியது.
2024 முதல் 27 வரை இந்திய தொலைக்காட்சி மற்றும் ஊடக ஒளிபரப்பு உரிமத்தை 24 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
வியாகாம் 18, சோனி பிக்சர்ஸ் நெட்வோர்க் இந்தியா, சீ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் டிஸ்னி ஸ்டார் என நான்கு நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொண்டன.
அடிப்படை கட்டணமாக 11,500 கோடியை ஐசிசி நிர்ணயித்த நிலையில் டிஸ்னி இரு மடங்கு தொகை செலுத்தி ஏலம் எடுத்துள்ளது.

இது குறித்து ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே கூறியபோது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு டிஸ்னி ஸ்டாருடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இது எங்கள் உறுப்பினர்களுக்கும், லட்சிய வளர்ச்சி திட்டங்களுக்கும் ஆதரவாக இருக்கும். டிஸ்னி எங்கள் எதிர்காலத்தின் ஒரு முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல் முன்பைவிட அதிகமான ரசிகர்களை இணைப்பார்கள்.
இந்தியாவில் பெண்களின் நிகழ்ச்சிகளுக்கு ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் பார்ட்னர் இருப்பது விளையாட்டில் பெண்களின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது எங்கள் லட்சியத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.
டிஸ்னிஸ்டார் பெண்களின் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் திட்டங்களை முன்வைத்தனர் என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, டிஸ்னி ஸ்டார் மேலாளரும் தலைவருமான கே. மாதவன், “சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் எங்கள் தொடர்பைத் தொடர முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், வரும் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பதன் மூலம் எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும் எதிர்நோக்குகிறோம்” என்றார்.
மோனிஷா