ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் இருந்து விளையாட்டு அமைச்சகம் தன்னை நீக்கியது வேதனை அளிப்பதாக இந்தியாவின் தீபா கர்மாகர் இன்று (ஆகஸ்ட் 15) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் வெண்கலம் வென்றவர் திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர். இதன்மூலம் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
பின்னர் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் முதல் முறையாக பங்கேற்று ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்தார். அதில் புரோடுனோவா என்ற ஆபத்து நிறைந்த ஜிம்னாஸ்டிக் பிரிவில் 4வது இடம்பிடித்து நூழிலையில் பதக்கத்தை தவறவிட்டார். எனினும், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபா பெற்றார்.
அதனைத்தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு துருக்கி நாட்டின் மெர்சின் நகரில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை போட்டியில் முதல் முறையாக தீபா கர்மாகர் தங்கம் வென்றும் சாதனை படைத்தார்.
இந்த நிலையில் தான் அவர் ஊக்கமருந்து விதி மீறலில் ஈடுபட்டது கண்டறியபட்டு 21 மாத கால சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான தடையை பெற்றார்.
கடந்த ஜூலை மாதத்துடன் அவரது தண்டனைக்காலம் முடிந்த நிலையில், புவனேஸ்வரில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுக் குழுவிற்கான சோதனையில் பங்கேற்று அதில் தீபா முதலிடம் பிடித்தார்.
இந்த நிலையில், அவரது பெயர் ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டிக்கான பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியின் இறுதிப் பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு அமைச்சகத்தின் புது விதி!
ஜூலை 10 ஆம் தேதி விளையாட்டு அமைச்சகம் வகுத்த புதிய தேர்வு அளவுகோல்களை அவர் பூர்த்தி செய்யாததே அவர் அணியில் இருந்து துரதிர்ஷ்டவசமாக நீக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
விளையாட்டு அமைச்சகம் தனது புதிய விதியில், ” போட்டியில் பங்கேற்கும் முந்தைய பன்னிரண்டு மாதங்களில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் கடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8வது இடத்தைப் பிடித்தவரின் செயல்திறனை விட குறைவாக இருக்கக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.
தீபாவின் விஷயத்தில், அவர் காயங்கள் மற்றும் ஊக்கமருந்து இடைநீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் கடந்த சில ஆண்டுகளாக எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு அதிர்ச்சியளிக்கிறது!
இந்த நிலையில் சுதந்திர தினமான இன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து சமூகவலைதள பக்கத்தில் தனது ஏமாற்றத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார் தீபா கர்மாகர்.
அவரது பதிவில், “இந்த சுதந்திர தினத்தன்று, எனது பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்தி, என்னை தளர்வுற செய்த சமீபத்திய நிகழ்வை பற்றி விவாதிக்க ஆசைப்படுகிறேன்.
இந்தாண்டு ஹாங்சோவில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பது நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்த ஒன்று.
தேசிய சோதனைகளில் முதலிடம் பிடித்தாலும், இந்திய விளையாட்டு அமைச்சத்தின் தேர்வு அளவுகோலைப் பூர்த்தி செய்தாலும், அதில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.
இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், நான் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் எனக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
முக்கியமான விளையாட்டு போட்டிகளுக்குத் தயாராகும் வீரர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகம் மிகவும் அரிதாகவே பாராட்டப்படுகிறது. எனது போராட்டத்தையும் இந்திய விளையாட்டு அமைச்சகம் கண்டுகொள்ளவில்லை.
அனைத்து விளையாட்டுகளிலும் தேர்வு அளவுகோல்கள் நியாயமான மற்றும் சீரான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் எனது கோரிக்கை. மேலும் வீரர்களை குழப்பாமல் சரியான தகவலை தெரிவிக்குமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளையில் என்ன நடந்தாலும் நாட்டுக்காக எனது பயிற்சியை என் நாட்டிற்கு தொடர நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஜிம்னாஸ்டிக் அணியில் இடம்பெறுவேன் என்று நம்புகிறேன்” என்று தீபா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு அமைச்சகத்திற்கு கடிதம்
30 வயதான கர்மாகர், , “கொரோனாவின் தாக்கம் மற்றும் ஊக்கமருந்து மீறல் காரணமாக இந்தாண்டு ஜூலை வரை தொடர்ந்த 21 மாத இடைநீக்கம் உட்பட பல பின்னடைவுகளை எடுத்துக்கூறி தன் மீதான தகுதி அளவுகோல்களை தளர்த்துமாறு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக விளையாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதனையடுத்து ஜிம்னாஸ்டிக் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (ஜி.எஃப்.ஐ) கடந்த வாரம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதை பரிசீலிக்குமாறு விளையாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு, தலைமை பயிற்சியாளர் மற்றும் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு, இந்திய ஆண்கள் கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இந்தியாவின் பெயரை ஜிம்னாஸ்டிக் போட்டியில் ஓங்கி ஒலிக்க செய்த தீபாவிற்கும் விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
’பாஜகவின் இரட்டை வேடத்தை பேசியுள்ளார் மோடி’: எதிர்க்கட்சிகள் விமர்சனம்!
சாதிய பிரிவுகள்… கண்காணிக்க உளவு பிரிவு வேண்டும்: திருமாவளவன்