இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும், ஆனால் நிச்சயம் கதவை உடைத்துக்கொண்டு அவர் வருவார் என்றும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் நாளை (டிசம்பர் 14 ) நடைபெறவுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவே அணியில் இடம்பெறாதது தான் பின்னடைவாக உள்ளது.
ரோகித் சர்மாவுக்கு மாற்று வீரராக வந்துள்ள அபிமன்யூ ஈஸ்வரன்தான் தற்போது ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
முழுக்க முழுக்க உள்ளூர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர் அபிமன்யூ.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ரஞ்சிக்கோப்பை போன்ற உள்நாட்டு தொடர்களில் மட்டுமே சிறப்பாக ஆடி வந்த அவரை, இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கு காரணம் வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த ரன்கள் தான். வங்கதேச ’ஏ’ அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்திய அபிமன்யு 2 போட்டிகளில் 299 ரன்களை குவித்தார். இதனால்தான் மெயின் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுகுறித்து கிரிக்பஸ்ஸிடம் நேற்று (டிசம்பர் 12 ) பேசிய அவர்,
”அபிமன்யூ ஈஸ்வரனுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆனால் கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தான் ஓப்பனிங் செய்வார்கள் என்பதால் அபிமன்யூவுக்கு வாய்ப்பு கிடைக்காது.
ஆனால் நான் சத்தியம் செய்து கூறுவேன், தொடர்ச்சியாக தேர்வுக்குழுவின் கதவுகளை உடைத்துக்கொண்டே இருக்கும் வீரராக அவர் இருப்பார்.
கடந்த 4 – 5 ஆண்டுகளாக மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவருடன் நான் பேசியிருக்கிறேன், நிறைய போட்டிகளில் விளையாடியும் இருக்கிறேன்.
அவரின் ஆட்டத்தை பார்த்ததால் சொல்கிறேன், நிச்சயம் இந்திய அணியில் பெரிய வீரராக திகழ்வார்” என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெஸ்ட் கிரிக்கெட்: ஆக்ரோஷமாக களமிறங்கும் இந்தியா
கத்தாரில் கால்பந்து : அரையிறுதிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!