Dinesh Karthik: இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழ்நாட்டின் நட்சத்திர வீரருமான தினேஷ் கார்த்திக், முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேறியபோது, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார். அவரது பிறந்தநாள் அன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நான் அதிகாரப்பூர்வமாக எனது ஓய்வை அறிவிக்கிறேன். எனது கிரிக்கெட் நாட்களை கடந்து, எனக்கு எதிராக காத்திருக்கும் சவால்களை எதிர்நோக்க காத்திருக்கிறேன்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்!
“கடந்த சில நாட்களாக எனக்கு கிடைத்த பாசம், ஆதரவு மற்றும் அன்பினால் நான் மூழ்கிவிட்டேன். இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
சில காலமாக நிறைய யோசித்துவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். நான் எனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, புதிய சவால்களை எதிர்கொள்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நம் நாட்டில் கிரிக்கெட் விளையாடும் மில்லியன் கணக்கானவர்களில், தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததால் அதிர்ஷ்டசாலியாக நான் கருதுகிறேன், மேலும் பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பதால் நான் இன்னும் அதிர்ஷ்டசாலி.
இத்தனை வருடங்களாக என் பெற்றோர் எனது பலம் மற்றும் ஆதரவின் தூண்களாக இருந்துள்ளனர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் நான் இன்று இப்படி இருக்க முடியாது.
மேலும் என்னுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக தன்னுடைய விளையாட்டு வாழ்க்கையை நிறுத்தி வைத் ஒரு தொழில்முறை விளையாட்டு வீராங்கனையும், எனது அன்பு மனைவியுமான தீபிகாவுக்கும் நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்.
நிச்சயமாக, கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு, ஒரு பெரிய நன்றி! உங்கள் ஆதரவும், வாழ்த்துகளும் இல்லாமல் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் சாதனைகள்!
2004 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் முறையாக இந்தியாவுக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
தனது கிரிக்கெட் பயணத்தில் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 1 சதம், 7 அரைசதம் உட்பட 1025 ரன்களை சேர்த்துள்ளார். மேலும் 57 கேட்ச்களையம், 7 ஸ்டம்பிங்களை அவர் செய்துள்ளார்.
அதேபோல, 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 9 அரைசதங்களுடன் 1752 ரன்கள், 64 கேட்ச்கள், 7 ஸ்டம்பிங்களை அவர் மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச டி20-யில், இந்தியாவுக்காக 60 போட்டிகளில் களமிறங்கியுள்ள தினேஷ் கார்த்திக், 686 ரன்கள், 30 கேட்ச்கள், 8 ஸ்டம்பிங்களை செய்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் ஒரு ஜாம்பவானாக அறியப்படும் தினேஷ் கார்த்திக், 17 தொடர்களில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 257 போட்டிகளில் களம் கண்டுள்ள தினேஷ் கார்த்திக், 22 அரைசதங்களுடன் 135.36 ஸ்ட்ரைக் ரேட்டில் 4842 ரன்களை சேர்த்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பிங்கில் 145 கேட்ச்கள், 37 ஸ்டம்பிங்களையும் மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
பியூட்டி டிப்ஸ்: எல்லா காலத்துக்கும் ஏற்றதா லிப் பாம்?
டாப் 10 நியூஸ் : சுங்க கட்டணம் உயர்வு முதல் டி20 உலகக்கோப்பை வரை!