ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று (ஜூலை 1) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழ்நாட்டின் நட்சத்திர வீரருமான தினேஷ் கார்த்திக், இந்தாண்டு மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து ஐசிசி அதிகாரப்பூர்வ கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் அவருக்கு ஆர்.சி.பி அணி நிர்வாகம் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த புதிய பொறுப்பை வழங்கியுள்ளது.
புதிய அவதாரத்தில் DK!
இதுகுறித்து ஆர்.சி.பி அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
”ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ’பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக’ தினேஷ் கார்த்திக் புதிய அவதாரத்தில் திரும்பியுள்ளார். எல்லா வகையிலும் எங்கள் விக்கெட் கீப்பரை வரவேற்கிறோம்,
கிரிக்கெட்டிலிருந்து வீரனை வெளியேற்றலாம் ஆனால் வீரனிடம் இருந்து கிரிக்கெட்டை எடுக்க முடியாது!” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.சி.பி அணிக்கு கோப்பை : தினேஷ் உறுதி!
இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது,
“நான் இந்த கடைசி 3 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டதற்கு உங்களது ஆதரவு தான் முழு காரணம். அதற்கு நன்றி. இந்த உலகில் மிகவும் பலமான ரசிகர்களை கொண்ட அணியாக ஆர்.சி.பி உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த அணிக்கு ஆதரவு உள்ளது. உலகக்கோப்பை தொடர் முடிந்து நியூயார்க்கில் இருந்து நான் இந்தியா திரும்பியதும் என்னை முதலில் சந்தித்த ஒருவர் ஆர்.சி.பி ரசிகர் தான்.
இப்போது நான் ஆர்.சி.பி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளேன். எனக்கு எப்போதும் கிடைக்கக்கூடிய உங்களின் ஆதரவு வரும் காலங்களிலும் தேவை.
ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாதது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பல தடவை நெருங்கி வந்தும் அதனை கைப்பற்ற முடியவில்லை. ஒரு பேட்டிங் பயிற்சியாளாராக ‘விரைவில் ஆர்.சி.பி அணி கோப்பையை வெல்லும்’ என்பதில் நான் உறுதியளிக்கிறேன்” என்று தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
தினேஷ் கார்த்திக் சாதனைகள்!
2004 அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் முறையாக இந்தியாவுக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடினார்.
தனது கிரிக்கெட் பயணத்தில் 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 1 சதம், 7 அரைசதம் உட்பட 1025 ரன்களை சேர்த்துள்ளார். மேலும் 57 கேட்ச்களையம், 7 ஸ்டம்பிங்களை அவர் செய்துள்ளார்.
அதேபோல, 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், 9 அரைசதங்களுடன் 1752 ரன்கள், 64 கேட்ச்கள், 7 ஸ்டம்பிங்களை அவர் மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச டி20-யில், இந்தியாவுக்காக 60 போட்டிகளில் களமிறங்கியுள்ள தினேஷ் கார்த்திக், 686 ரன்கள், 30 கேட்ச்கள், 8 ஸ்டம்பிங்களை செய்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் ஒரு ஜாம்பவானாக அறியப்படும் தினேஷ் கார்த்திக், 17 தொடர்களில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 257 போட்டிகளில் களம் கண்டுள்ள தினேஷ் கார்த்திக், 22 அரைசதங்களுடன் 135.36 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,842 ரன்களை சேர்த்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பிங்கில் 145 கேட்ச்கள், 37 ஸ்டம்பிங்களையும் மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார் : எடப்பாடி இரங்கல்!
அமிதாப் பச்சன் இறுதிப்போட்டியை பார்க்காததற்கு இதுதான் காரணமா?
Share market: மாத, வார முதல் நாள்… எந்த பங்குகளில் கவனம் வேண்டும்?