ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கு ‘டாப்ஸ்’ திட்டத்தின் கீழ் ரூ. 1.50 கோடி நிதியுதவி பெற்றதாக வெளியான செய்தியை பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா உறுதியாக மறுத்துள்ளார்.
தொடக்க நிகழ்ச்சி முதல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியானது பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில் 117 வீரர்களுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கத்துடன் 71வது இடத்தில் போட்டியை நிறைவு செய்தது.
வழக்கம்போல் ஈட்டி எறிதல், மல்யுத்தம், துப்பாக்கிச் சூடு, ஹாக்கி ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வென்றனர்.
ஆனால் பேட்மிண்டன், வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் கடுமையாக போராடியும் இந்திய வீரர்களால் பதக்கம் வெல்ல முடியவில்லை.
இதில் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் லீக் சுற்றில் தோல்வியை தழுவிய 34 வயதான அஸ்வினி பொன்னப்பா கண்ணீருடன் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர்களின் மோசமான செயல்பாடு மற்றும் அவர்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்ற நிதியுதவி தொடர்பான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக லக்ஷ்யா சென், பி.வி.சிந்து, ஹெச்.எஸ் பிரணாய், அஸ்வினி பொன்னப்பா, தனிஷா, சாத்விக் ரெட்டி மற்றும் சிராக் ஷிட்டி ஆகியோர் தங்களுக்கு அளிக்கப்பட்ட கணிசமான நிதியுதவியை மீறி பதக்கங்களைப் பெறத் தவறியதாக விமர்சனம் எழுந்தது.
டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (TOPS) கீழ் பல்வேறு பேட்மிண்டன் வீரர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை விவரிக்கும் செய்தியை PTI வெளியிட்டிருந்தது.
அதன்படி, 2023 உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெச்எஸ் பிரணாய், அவரது பயிற்சிக்காக ரூ.1.8 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறினார் என்றும்,
அஸ்வினி பொன்னப்பா மற்றும் அவரது ஜோடியான தனிஷா க்ராஸ்டோ ஆகியோர் டாப்ஸிடம் இருந்து தலா 1.50 கோடி ரூபாய் பெற்றதாகவும், ஆனால் அவர்கள் லீக் சுற்றிலேயே தோற்று வெளியேறினர் என்றும் தெரிவித்திருந்தது.
இதனால் மத்திய அரசின் நிதியை அஸ்வினி, பிரணாய் உள்ளிட்ட வீரர்கள் வீணடித்துள்ளதாக சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிடிஐ மற்றும் மற்ற செய்தித் தளங்களில் நிதியுதவி பெற்றதாக வெளியான செய்திக்கு அஸ்வினி பொன்னப்பா கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
நவம்பர் வரை சொந்த பணத்தை செலவழித்தேன்!
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உண்மைகளை சரியாகப் பெறாமல் ஒரு கட்டுரையை எப்படி எழுதுகிறார்கள்? இந்தப் பொய்யை எப்படி எழுத முடியும்? ஒவ்வொருவரும் ரூ. 1.50 கோடி பெற்றோமா? யாரிடமிருந்து? எதற்கு? நான் இந்தப் பணத்தைப் பெறவில்லை.
நிதியுதவிக்காக நான் எந்த நிறுவனத்திலோ அல்லது TOPSன் ஒரு பகுதியாகவோ இருக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் வரை அனைத்து போட்டிகளுக்கும் என் சொந்த பணத்தை தான் செலவழித்தேன். அதன் பிறகு நான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதால், போட்டிகளுக்கான இந்திய அணியுடன் அனுப்பப்பட்டேன்.
உண்மை என்னவென்றால், பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்ற பிறகுதான் நான் TOPS திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டேன். அதுவும் ஒலிம்பிக் வரையிலான காலத்திற்கு மட்டுமே. அவ்வளவுதான்.
இப்படி இருக்கையில், உண்மைகளை சரிபார்க்காமல் பொய்யான செய்திகளைக் கொண்டு எப்படி எழுத முடியும்?
நான் எந்தவொரு ஆதரவு நிறுவனங்கள் மற்றும் CSR மேம்பாட்டுக் குழுக்களிடமிருந்தும் ”எந்த நிதியும் பெறவில்லை”
மேலும் எங்களது பயிற்சியாளர் எங்களுடன் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால் அதற்கு கூட மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
எங்களைப் பற்றியும், ஒலிம்பிக்கிற்கு வீரர்களை தயார்படுத்துவதற்காக வழங்கப்பட்ட நிதி பற்றியும் எந்த செய்திகளையும் வெளியிடுவதற்கு முன்பு கொஞ்சம் உண்மைகளைச் சரிபாருங்கள்” என்று அஸ்வினி பொன்னப்பா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அடுத்த ஒலிம்பிக் குள்ளயாவது தீர்ப்பு வந்துருமா? : அப்டேட் குமாரு