2024 டைமண்ட் லீக் தொடர் கடந்த ஏப்ரல் 20 அன்று சீனாவில் உள்ள சியாமென் நகரில் துவங்கிய நிலையில், செப்டம்பர் 14 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இந்த தொடரில், ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்று 16 வகையான தடகள போட்டிகள் நடத்தப்படும்.
இதில் ஒவ்வொரு போட்டியும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக, பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு, இறுதியில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
இப்படியான நிலையில், கத்தாரில் உள்ள தோஹா நகரில் இந்த டைமண்ட் லீக் தொடருக்கான 3வது கட்ட ஆட்டங்கள் நேற்று (மே 10) நடைபெற்றன.
அதில், இந்த தொடரின் முதல் சுற்று ஈட்டி எறிதல் போட்டியும் நடத்தப்பட்டது. இந்த போட்டியில், இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா மற்றும் கிஷோர் ஜனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 10 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
இப்போட்டியில், முதலில் அனைவருக்கும் 3 வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், நீரஜ் சோப்ரா முதல் எறிதலை தவறாக வீசினாலும், 3வது முறை 86.24 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து 2வது இடத்தில் இருந்தார்.
மற்றோரு இந்திய வீரரான கிஷோர் ஜனா, தனது 3 வாய்ப்புகளில் அதிகப்படியாக 76.31 மீ தூரத்திற்கு மட்டுமே ஈட்டியை எறிந்து 9வது இடம் பிடித்தார். இதன் காரணமாக, முதல் சுற்றிலேயே அவர் வெளியேறினார்.
இந்த முதல் 3 வாய்ப்புகளில், மிரட்டலாக ஈட்டியை எறிந்த செக் வீரர் ஜக்குப் வத்லெச், 3வது வாய்ப்பில் அதிகப்படியாக 88.38 மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
முதல் 3 வாய்ப்புகளுக்கு பிறகு, கடைசி 2 இடங்கள் பிடித்த வீரர்கள் வெளியேற்றப்பட்ட பின், மீதமிருந்த 8 வீரர்களுக்கு மேலும் 2 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
இதில், ஜக்குப் வத்லெச் மற்றும் நீரஜ் சோப்ரா தொடர்ந்து முதல் 2 இடங்களை தக்கவைத்துக்கொண்டனர். 85.75 மீ தொலைவிற்கு ஈட்டியை எறிந்து, கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3வது இடம் பிடித்தார். இதை தொடர்ந்து, இவர்கள் மூவரை தவிர அனைவரும் நாக்-அவுட் ஆகினர்.
பின் இவர்கள் மூவருக்கும் கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பில் ஜக்குப் வத்லெச் தவறாக ஈட்டியை எரிந்தாலும், 88.38 மீ ஈட்டி எறிதலுடன் அவர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.
நீரஜ் சோப்ரா தனது கடைசி வாய்ப்பில் 88.36 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, வெறும் 2 செ.மீ தொலைவில் தங்கப்பதக்கத்தை இழந்து 2வது இடம் பிடித்தார்.
கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தனது கடைசி வாய்ப்பில் 86.62 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, 3வது இடம் பிடித்தார்.
முன்னதாக, 2022 டைமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் பிரிவில் நீரஜ் சோப்ரா பட்டத்தை வென்ற நிலையில், 2023 டைமண்ட் லீக் தொடரில் ஜக்குப் வத்லெச் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான சூழலில், முதல் போட்டியே இந்த 2 பேரிடம் மிக நெருக்கமான போட்டியாக அமைந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
2024 டைமண்ட் லீக் தொடரில், ஈட்டி எறிதலுக்கான அடுத்த சுற்று ஆட்டங்கள், ஜூலை 7 அன்று பாரிஸில் நடைபெறவுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராக்கெட் வேகத்தில் நேற்று ஏறிய தங்கம் விலை…. இன்று குறைஞ்சிருக்கு : எவ்வளவு தெரியுமா?
பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் : முக்கிய குற்றவாளி கைது!