Neeraj Chopra: 2024 டயமண்ட் லீக் தொடர் கடந்த ஏப்ரல் 20 அன்று சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் துவங்கியது. பல்வேறு தகுதி சுற்றுகளுக்கு பின், இந்த தொடரின் இறுதிப் போட்டிகள் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது.
தடகளப் போட்டிகளுக்காகவே பிரத்யேகமாக நடைபெறும் இந்த தொடரில், ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவருடன் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜூலியன் வெப்பர்ஸ், அன்ட்ரியன் மர்டரே, கென்கி ரோட்ரிக் டீன், ஆர்தர் பெல்ஃப்னர், டிமோத்தி ஹெர்மன் ஆகிய 7 வீரர்கள் இந்த போட்டியில் களமிறங்கினர்.
இந்த போட்டியின் முதல் சுற்றிலேயே கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.87 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தை பிடித்தார். நீரஜ் சோப்ரா 86.82 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து 2வது இடத்தில் இருந்தார். 85.97 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்த ஜூலியன் வெப்பர்ஸ் 3வது இடத்தை பிடித்தார்.
2வது சுற்றிலும் இதே நிலை தொடர்ந்தது.
3வது சுற்றில் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டி 87.86 மீ தூரம் சென்ற நிலையில், ஆண்டர்சன் பீட்டர்ஸிடம் இருந்து 1 செ.மீ பின்தங்கி, நீரஜ் சோப்ரா 2வது இடத்திலேயே இருந்தார்.
6வது சுற்று வரை இந்த வரிசையில் எந்த மாற்றமும் நிகழாத நிலையில், 1 செ.மீ-ல் தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் அதிகபட்சமாக 87.86 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்திருந்தார்.
87.87 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். வெண்கலப் பதக்கம் ஜூலியன் வெப்பர்ஸ்க்கு சென்றது.
இது நீரஜ் சோப்ரா வெல்லும் 3வது டயமண்ட் லீக் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 2022 டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 2023 டயமண்ட் லீக் தொடரில், ஜக்குப் வட்லெஜ்ச்சிடம் தங்கப் பதக்கத்தை இழந்த நீரஜ் சோப்ரா, வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தொடர்ந்து இந்தாண்டு ஒரு செண்டிமீட்டரில் தங்கப்பதக்கத்தை தவறவிட்டுள்ளார் நீரஜ் சோப்ரா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
”சுயமரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்கமாட்டேன்” : மணிமேகலை அதிருப்தி!
நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களின் நிலை என்ன? : கடலூர் ஆட்சியர் விளக்கம்!