தோனி சொன்ன வார்த்தையால் ருத்ரதாண்டவம் ஆடிய ரஹானே

விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய ரஹானேவின் அபார பேட்டிங் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி பேசியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று(ஏப்ரல் 8) இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை அணியின் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 32 ரன்களும், டிம் டேவிட் 31 ரன்களும் எடுத்தனர்.

சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும், சாண்ட்னர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ரஹானேவின் அதிரடி

இதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை அணியில் டீவன் கான்வே டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே யாருமே எதிர்பாராத வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மைதானத்தில் நாலாப்புறமும் பந்துகளை சிதறடித்த அவர் 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 7 பவுண்டரிகளும் 3 சிக்ஸரும் அடங்கும்.

அடுத்ததாக களத்திற்கு வந்த சிவம் துபே 28 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், கடைசி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையாக விளையாடிய ருத்துராஜ் கெய்க்வாட் 40 ரன்களும், அம்பத்தி ராயூடு 20 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 18.1 ஓவரில் இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பரம எதிரியாக வர்ணிக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியை மீண்டும் ஒருமுறை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்ததை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக எப்போதும் அமைதியான ஆட்டத்தை வெளிபடுத்தும் ரஹானே, தனது சொந்த ஊரான மும்பையில் பம்பரமாய் சுழன்றடித்து அது சென்னை அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே வெற்றிக்கு உதவியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசித்து ஆடுங்கள் ரஹானே

ரஹானே இந்த அதிரடி பேட்டிங் குறித்து போட்டிக்கு பிறகு தோனி கூறுகையில், “போட்டியின் தொடக்கத்தில் நானும் ஜிங்க்ஸும்(அஜிங்கியா ரஹானே) பேசினோம். நான் அவரிடம், ’உங்களுடைய பலத்திற்கு ஏற்றவாறு விளையாடுங்கள். திறமையைப் பயன்படுத்தி மைதானத்தை உங்கள் வசம் கொண்டு வாருங்கள்.

’மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் ரசித்து ஆடுங்கள். நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்.’ என்றேன். அதன்படியே, அவரும் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கிச்சன் கீர்த்தனா: இனிப்பு உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லதா?

கோடை: தமிழ்நாட்டில் மின்தேவை 18,252 மெகாவாட்டாக உயர்வு!

+1
3
+1
2
+1
2
+1
8
+1
1
+1
3
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *