வரும் 2025 -ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கும் வகையில் அவரை உள்ளூர் வீரராக அறிவிக்க வேண்டி விதியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து சமீபத்தில் நடந்த ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விதியை கொண்டு வந்தால் மூத்த வீரர்களை நாம் அவமானப்படுத்துவது போல இருக்கும் எனவும், தோனி போன்ற ஒரு வீரர் இந்தியாவுக்காக பல சாதனைகளை செய்த பின் உள்ளூர் வீரர் என அறிவிப்பது அவரை அவமதிக்கும் செயல் எனவும் அவர் கருத்து வெளியிட்டதாக தெரிகிறது.
தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியை தவிர்த்து நான்கு வீரர்களை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், தோனிக்கு அதிக சம்பளம் கொடுத்தால் மற்ற வீரர்களை ஏலத்தில் எடுப்பது கடினமாகும்.
தோனியை உள்ளூர் வீரராக அறிவித்தால், அதன் மூலமாக அவரை குறைந்த சம்பளத்தில் தக்க வைத்துக் கொள்ள முடியும். அவருக்கான சம்பளத்தை குறைத்து அந்த பணத்தை கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் கணக்கு போடுகிறது.
தோனியும் தனக்காக அதிக சம்பளத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அணியின் நலனுக்கே முக்கியத்துவம் அளியுங்கள் என சிஎஸ்கே நிர்வாகத்திடம் திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதையடுத்து, சிஎஸ்கே நிர்வாகம், பிசிசிஐ நடத்திய ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு மேல் சர்வதேச போட்டிகளில் ஆடாத இந்திய அணி வீரர்களை உள்ளூர் வீரர்கள் என அறிவிக்கும் வகையில் விதியில் மாற்றத்தை செய்யும்படி நிர்பந்தித்துள்ளது.
ஏற்கனவே இருந்த அந்த விதியை தோனிக்காக மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மற்ற ஐபிஎல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் தான் அதிக எதிர்ப்பை வெளிக்காட்டினார். எனினும் 2025 ஆம் அண்டு ஐபிஎல் தொடரில் தோனி ஆடினால் அது ஐபிஎல்-க்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்பதை உணர்ந்துள்ளதாக பிசிசிஐ தோனிக்கு சாதகமாவே முடிவெடுக்கும் என்று தாராளமாக நம்பலாம்.
இதற்கிடையே, சி.எஸ்.கே. தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தாங்கள் உள்ளுர் ஆட்டக்காரர் விதியை மீண்டும் கொண்டு வர வலியுறுத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எம்.குமரேசன்
நன்றி இந்தியர்களே…! உற்சாக வரவேற்பால் வினேஷ் ஆனந்த கண்ணீர்