தோனிக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம்: சேவாக் அறிவுரை!

விளையாட்டு

சென்னை அணி வீரர்கள் பந்து வீச்சில் கவனம் செலுத்தி, எக்ஸ்ட்ரா ரன்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேப்டன் தோனிக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனிடையே, இந்தப் போட்டியின்போது, சென்னை அணி பந்துவீச்சாளர்கள் அதிக ‘எக்ஸ்ட்ரா’ ரன்களை கொடுத்தனர். 3 நோ-பால்கள், 2 லெக்பைஸ், 13 வைடு என மொத்தம் 18 ரன்களை எக்ஸ்ட்ராவாக வாரி வழங்கினர். அதிலும் குறிப்பாக, துஷார் தேஷ்பாண்டே 4 வைடு, 3 நோ-பால் என மொத்தம் 7 எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கினார்.

இதையடுத்து போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் தோனி, “பந்துவீச்சாளர்கள் ஒரு நோ-பாலும் வீசக்கூடாது, குறைவான வைடுகளையே வீச வேண்டும். நாம் கூடுதலாக நிறைய பந்துகளை வீசியுள்ளோம். அதை நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் வீரர்கள் வேறொரு கேப்டன் தலைமையில்தான் விளையாட நேரிடும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து Cricbuzz இணையதளத்தில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், “வைடுகள் மற்றும் நோ-பால்களின் எண்ணிக்கை இந்த சீசனில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, இதுகுறித்து தோனி விரிவாகப் பேசியுள்ளார்.

எக்ஸ்ட்ராவாக பந்துவீசுவதால், சென்னை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்டத்தை முடிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டது. இது, போகப்போக தோனிக்கு தடையை ஏற்படுத்தலாம்.

தொடர்ந்து சென்னை அணி வீரர்கள் எக்ஸ்ட்ரா வீசுவதால் தோனி மகிழ்ச்சியாக இல்லை. இதனால், தோனிக்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, அவர் களமிறக்கப்படாமல் போகலாம். அதற்கு சென்னை அணி பந்து வீச்சாளர்கள் வாய்ப்பு அளிக்கக்கூடாது” என்றார்.

மேலும், முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், தோனி இன்னும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடக்கூடும் என்று தெரிகிறது. இருந்தாலும் அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சென்னை அணி பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து எக்ஸ்ட்ராவாக பந்து வீசினால், அது தோனி ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளிவிடும்” என கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சாதி பிரதிநிதிகளை சந்தித்த ஆளுநர்: வெடிக்கும் அடுத்த சர்ச்சை!

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *