தோனியிடம் ஆட்டோகிராஃப் : சுனில் கவாஸ்கர் நெகிழ்ச்சி!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியிடம் சென்று தன்னுடைய சட்டையில் ஆட்டோகிராஃப் வாங்கியது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

கடந்த மே 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க தோனி மைதானத்துக்குள் வந்தபோது அங்கு வந்த கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தோனியிடம் ஆட்டோகிராஃப் கேட்டார். தோனியும் அதற்கு சம்மதித்து அவருடைய சட்டையில் ஆட்டோகிராஃப் இட்டார்.

இந்நிலையில் , அந்த தருணம் குறித்து இன்று(மே16) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பகிர்ந்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

அதில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தோனி ஆகியோர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார்கள் என கேள்விப்பட்டவுடன், நானும் ஒரு மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்த விரும்பினேன். அதனால்தான் ஆட்டோகிராஃப் வாங்க தோனி இருக்கும் இடத்தை நோக்கி ஓடினேன்.

ஏனென்றால் அதுதான் சேப்பாக்கத்தில் அவரின் கடைசிப் போட்டி. நிச்சயமாக சென்னை அணி பிளே ஆஃப் தகுதிபெறும்பட்சத்தில் மீண்டும் அவர் வருவார். ஆனால் அந்நாள் அத்தருணத்தை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “நல்வாய்ப்பாக அங்கிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் மார்க்கர் பென் இருந்தது. இப்போது அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் தோனியிடம் சென்று நான் அணிந்திருக்கும் சட்டையில் ஆட்டோகிராஃப் போட சொன்னேன்.

அவர் உடனே சம்மதித்து ஆட்டோகிராஃப் இட்டார். அது மிகவும் உணர்ச்சிமிக்க தருணமாக இருந்தது. இந்திய கிரிக்கெட்டுக்காக பல சாதனைகளை செய்த ஒருவரிடம் இருந்து ஆட்டோகிராஃப் பெறுவது மிகவும் உணர்ச்சிகரமானது” என்றார் சுனில் கவாஸ்கர்.

மேலும் “நான் இறப்பதற்கு முன் 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் வென்ற உலகக் கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு தோனி அடித்த சிக்ஸையும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அதிமுக சட்ட விதிகள் ஏற்பு: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

ரூ.10 லட்சம் கொடுத்தது ஏன்?: பொன்முடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *