“நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை”: யுவராஜ் சிங்

விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டில், பேட்டிங்கில் நட்சத்திர இணை என்றாலே, சச்சின் – சேவாக், டிராவிட் – லக்ஷ்மண் போல நமது நினைவுக்கு வரும் ஓரு ஜோடி தோனி – யுவராஜ். இந்த 2 ஆக்ரோசக்காரர்களும் ஒன்றிணைந்து பல எண்ணற்ற போட்டிகளை இந்தியாவுக்காக வென்று கொடுத்திருக்கிறார்கள்.

2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி என்றாலே தோனியின் சிக்ஸர் தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், நம்மில் பெரிதும் கவனத்தில் கொண்டிராத ஒன்று, அப்போட்டியில் வெற்றி பெறும்போது 5வது விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது, இந்த தோனி – யுவராஜ் ஜோடி தான். இப்படி, நாம் கவனத்தை பெற்றும், பெறாமலும், இந்த ஜோடி இந்திய அணியை பல முறை வெற்றியை நோக்கி அழைத்து சென்றுள்ளது.

இந்நிலையில், “தோனியும் நானும் ஒன்றும் நெருங்கிய நண்பர்கள் இல்லை”, என யுவராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து, இருவரின் ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள யுவராஜ் சிங், “நானும் மாஹியும் நெருங்கிய நண்பர்கள் இல்லை. கிரிக்கெட்டினாலேயே நாங்கள் நண்பர்களானோம், ஒன்றாக விளையாடியுள்ளோம். ஆனால், மைதானத்திற்கு வெளியே என்னுடைய வாழ்க்கை முறை வேறு, தோனியின் வாழ்க்கை முறை வேறு.”, என்று தெரிவித்துள்ளார்.

“அணி என்றால், மைதானத்திற்கு வெளியில் அனைத்து 11 வீரர்களுடனும் நெருங்கிய நட்புடன் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சிலர் சிலருடன் மட்டுமே அதிக நேரத்தை செலவிடுவார்கள். அனைத்து வீரர்களும் அனைவருடனும் ஒத்துப்போக மாட்டார்கள். ஆனால், களத்தில் இருக்கும்போது, அவை அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு, அணியின் வெற்றியை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்”, என்றும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், தோனியுடன் இணைந்து விளையாடியது குறித்து பேசியுள்ள யுவராஜ் சிங், “தோனியும் நானும் களத்தில் நுழைந்தால், நாட்டுக்காக 100%க்கும் அதிகமான உழைப்பை தருவோம். அவர் கேப்டனாக இருந்தபோது, நான் துணை கேப்டன். கேப்டன் மற்றும் துணை கேப்டன் என்றாலே, இருவருக்கும் கண்டிப்பாக மாறுபட்ட கருத்து இருக்கும். அப்படி சில சமயங்களில் எனக்கு பிடிக்காத முடிவை அவர் எடுப்பார். சில சமயங்களில் அவருக்கு பிடிக்காத முடிவை நான் எடுத்துள்ளேன். இது அனைத்து அணியிலும் நடக்கும்”, என்று தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில், 2019 உலககோப்பைக்கு முன்னதாக நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த யுவராஜ் சிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற தெளிவான புரிதல் இல்லாதபோது, தான் தோனியிடம் அறிவுரை கேட்டதாகவும், அதற்கு தோனிதான், தான் தேர்வுக் குழுவின் பார்வையில் இல்லை எனக் கூறியதாகவும், அதன்மூலம் தனக்கு உண்மையான சூழல் புரிந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இவை அனைத்தும் 2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக நடந்த நிகழ்வு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியில், “நாங்கள் இருவரும் ஒய்வு பெற்றுவிட்டோம். இப்போது நாங்கள் வெளியில் சந்தித்தால், நண்பர்கள் போலவே பேசிக்கொள்வோம். எங்களின் பழைய நாட்களை நினைவுகூர்ந்து கொள்வோம்”, எனவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

இரவில் வேகமாக செல்லலாமா?: போக்குவரத்து கூடுதல் ஆணையர் பேட்டி!

இன்றும், நாளையும் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *