துபாயில் டோனியும், ஹர்திக் பாண்டியாவும் ஆடிய நடன வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் அவர், கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.
2017 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை உள்ளிட்ட கோப்பைகளை உச்சிமுகர வைத்த சாதனைகளுக்கு டோனியே காரணம். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு, 4 முறை கோப்பைகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

அதனால்தான், இந்திய ரசிகர்கள் இன்றும் டோனியை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடி வருகின்றனர். தீவிர விவசாயத்திலும் ஈடுபட்டு வரும் டோனி, தற்போது திரைப்படத் துறையில் தடம் பதிக்கும் நோக்கில், தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், துபாய் நிகழ்ச்சியொன்றில் அவர் ஆடிய கலக்கல் நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துபாயில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர் பாட்ஷாவின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க டோனிக்கும், மற்றொரு கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் டோனியும், ஹர்திக் பாண்டியாவும் உற்சாகமாக நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் டோனியின் மனைவி சாக்ஷி, ஹர்திக் பாண்டியாவின் சகோதரர், இஷான் கிஷான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.