ஐபிஎல் தொடரில் மீண்டும் தோனி?: அவரே அளித்த அட்டகாசமான பதில்!

விளையாட்டு

“மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாக நான் எப்போதும் இருப்பேன்” என்று தோனி தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (மே 23) இரவு நடைபெற்ற நடப்பு ஐபில் தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சொந்த மைதானத்தில் ஆடிய சென்னை அணி டாஸில் தோற்றாலும் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன்மூலம் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்னை அணி அபாரமாக முன்னேறியுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையாகும். சென்னையைத் தொடர்ந்து மும்பை அணி 6 முறை ஐபிஎல் பைனலுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியிடம் வர்ணனையாளர் ஹர்சா போக்லே கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலை கொடுத்தார்.

கேள்வி: மற்றொரு ஐபிஎல் பைனல் போட்டிக்கு சிஎஸ்கே சென்றுள்ளது. எப்படி பார்க்கிறீர்கள்?

தோனி: இது மற்றொரு இறுதிப் போட்டி என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஐபிஎல் என்பது மிகப்பெரிய தொடர். முன்புகூட 8 அணிகள், இப்போது 10 அணிகள். எனவே இதை சாதாரணமாக மற்றொரு இறுதிப் போட்டி என்று நிச்சயம் சொல்லிவிட முடியாது. இதற்கு பின்னால் ஒவ்வொரு வீரர்களுடைய இரண்டு மாத கால கடின உழைப்பு இருக்கிறது.

கேள்வி: நீங்கள் முதலில் பந்துவீச வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களா?

குஜராத் டைட்டன்ஸ் ஒரு அற்புதமான அணி. அவர்கள் நன்றாக இலக்கை துரத்தி வந்தார்கள். மைதானத்தின் சூழல்கள் ஜடேஜாவுக்கு உதவும் என்று நினைத்தேன். அப்படி நடந்தால் ஜடேஜாவின் பந்துகளை எதிர்கொள்வது கடும் சிரமமாக இருக்கும். அது தான் நடந்தது. அவரின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றியது. எனவே குஜராத் அணி டாஸ் வென்றது ஒருவகையில் நல்லது தான்.

கேள்வி: 2008ஆம் ஆண்டிலிருந்து கோனி, தியாகி, மோகித் ஷர்மா, ஷர்துல் தாக்கூர், கடந்த வருடம் முகேஷ் சவுத்ரி, நடப்பு தொடரில் பதிரானா மற்றும் தேஷ்பாண்டே என்று தொடர்ந்து நிறைய இளம் பந்துவீச்சாளார்களை சிஎஸ்கே அணி உருவாக்கியுள்ளது. என்ன செய்கிறீர்கள்? எப்படி அவர்களை உருவாக்குகிறீர்கள்?

தோனி: ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பலம் என்ன என்பதை அறிந்து அதற்கான சூழலை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அவர்களுக்கு நம்பிக்கையை அளித்து, ‘தயவுசெய்து உங்கள் பந்துவீச்சை பட்டைத் தீட்ட முயற்சியுங்கள்’ என்று அவர்களிடம் அறிவுறுத்துகிறோம். இப்படி முடிந்தவரை அவர்களால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். இதற்கு பக்கபலமாக பிராவோ, எரிக் போன்ற பயிற்சியாளர்கள் உள்ளனர்.

கேள்வி: இன்று உங்கள் கேப்டன்சியில் எல்லாம் சிறப்பாக நடந்தது என்று கருதுகிறீர்களா?

தோனி: என் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டே நான் எப்போதும் செயல்படுகிறேன். பீல்டிங் செட் செய்யும் விதத்தில் நான் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கேப்டன்தான் என்று நினைக்கிறேன். ஏனெனில் 2,3 பந்துகளுக்கு ஒருமுறை நான் பீல்டீங் மாற்றிக்கொண்டே இருப்பேன். பீல்டிங் செய்பவர்கள் என் மீது ஒரு கண்ணை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளேன். கேட்சை தவறவிட்டால் என்னிடம் இருந்து எந்த ரியாக்சனும் இருக்காது. அப்போதும் பீல்டர்கள் என் மீது ஒரு கண் வைத்து கொள்ள சொல்வேன்.

கேள்வி: நான் ஒவ்வொரு வருடமும் கேட்கிறேன். அடுத்த சீசனில் சேப்பாக்கில் விளையாடுவீர்களா?

தோனி: அது பற்றி எனக்குத் தெரியாது. அதை முடிவு செய்ய இன்னும் 8-9 மாதங்கள் உள்ளன. டிசம்பரில் மினி ஏலம் நடைபெறும். இப்போது ஏன் அந்த தலைவலியை எடுக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். மைதானத்திலோ அல்லது வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன். விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பிலா இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் ஒரு அங்கமாகவே இருப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கிச்சன் கீர்த்தனா: சுரைக்காய் மோர்க்குழம்பு

துப்பறிவாளனில் விஷாலுக்கு தொப்பி வைத்தது ஏன்?: மிஷ்கின் விளக்கம்!

+1
0
+1
3
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *