TNPL 2024: 2024 தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது லீக் போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ஆர் கவின் தலைமையிலான சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
சேலத்தில் உள்ள எஸ்.சி.எஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து அந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அஸ்வின் மற்றும் சிவம் சிங் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் மற்றும் விமல் குமார் பொறுப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். விமல் குமார் 47 ரன்களுக்கும், இந்திரஜித் 51 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்களும் சொற்ப ரன்களுக்கு ஃபெவிலியன் திரும்பினர்.
கடைசியில் எஸ் தினேஷ் ராஜ் மட்டும் 20 ரன்கள் சேர்க்க, திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்திருந்தது. சேலம் அணிக்காக சன்னி சந்து, ஹரிஷ் குமார் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணிக்கு எஸ் அபிஷேக் மற்றும் ஆர் கவின் சிறப்பான துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் சேர்த்திருந்தபோது, இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் வருண் சக்ரவர்த்தி. எஸ் அபிஷேக் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் அதிரடியாக தனது ஆட்டத்தை துவங்கினார். மறுமுனையில் பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த கவின் 46 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால், பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட்டு, ராஜேந்திரன் விவேக் 28 பந்துகளில் 51 ரன்கள் விளாச, சேலம் அணி 19வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
தனது இந்த அதிரடியான ஆட்டத்திற்காக, ராஜேந்திரன் விவேக் இப்போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5வது இடத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
”தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை”: எல்.முருகன் குற்றச்சாட்டு!
ஆம்ஸ்ட்ராங் படுகொலை : தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ்!