ஐபிஎல் தொடர் லீக் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி அணி.
ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 24) இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 34வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். பில் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய மிட்சேல் 25 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டெல்லி அணிக்குத் தொடக்கமே சொதப்பலாக அமைந்த நிலையில் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று மறுபுறம் களமிறங்கியிருந்த டேவிட் வார்னர் 21 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். டேவீட் வார்னர் விளையாடிய அதே ஓவரில் சர்ஃபாரஸ் கான் 10 ரன்களிலும் கடைசி பந்தில் அமான் கான் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதனால் டெல்லி அணி 62 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து களமிறங்கிய அக்சர் மற்றும் மனிஷ் பாண்டே தலா 34 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய டெல்லி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி அணி.
ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களும் சாய்த்தனர்.
தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்க வீரர்கள் ஹாரி ப்ரூக் 7 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த மயங் அகர்வால் அரை சதம் அடிக்கவிருந்த நிலையில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அந்த நிலைமையில் நிதானமாக விளையாட முயற்சித்த அபிஷேக் ஷர்மா 5 ரன்களிலும் ராகுல் திரிபாதி 15 ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர்.
இந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் மார்க்கம் 3 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பிய நிலையில் ஹென்றிச் க்ளாஸென் – வாஷிங்டன் சுந்தர் ஜோடி அதிரடியாக ரன்களை குவித்தது. ஹென்றிச் க்ளாஸென் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்று வெற்றியை நெருங்கிய சூழலில் வாஷிங்டன் சுந்தருடன் இணைந்தார் மார்கோ ஜான்சென்.
ஆனால் கடைசி ஓவரில் பந்துவீசிய டெல்லி பவுலர் முகேஷ் குமார் 2,0,1,1,1,0 என்று வெறும் 5 ரன்களை மட்டும் கொடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியின் போது டெல்லி அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய நிலையில் ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஹைதராபாத் அணி வீரர்கள் சொதப்பியதால் டெல்லி அணி 150-க்கும் குறைவான இலக்கை அடைய விடாமல் பவுலிங் செய்து சாதனை வெற்றி பெற்றுள்ளது.
மோனிஷா