7 ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பான்டிங்கை, அந்த பொறுப்பில் இருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது.
இது குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “7 சீசன்களுக்குப் பிறகு, டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிக்கி பாண்டிங்கை பதவிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது ஒரு சிறந்த பயணம், கோச்! எல்லாவற்றிற்கும் நன்றி”, எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், “டியர் ரிக்கி, நீங்கள் எங்கள் தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது, இந்த அறிவிப்பை வெளியிட எங்களுக்கு மிகக் கடினமாக உள்ளது. நீங்கள் ஒவ்வொரு அணியின் சந்திப்பில் எங்களுக்கு சொல்லும் 4 விஷயங்கள் இவை தான் – அக்கறை, அர்ப்பணிப்பு, அணுகுமுறை & முயற்சி. இந்த 4 வார்த்தைகளும் நமது இந்த 7 ஆண்டு பயணத்தை குறிக்கிறது”, எனவும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, “7 தொடர்களிலும் ஒவ்வொரு பயிற்சிக்கும் முதல் ஆளாக வரும் நீங்கள், கடைசி நபராகவே மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளீர்கள்”, என்றும் ரிக்கி பான்டிங்கின் அர்ப்பணிப்பு குறித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த ரிக்கி பான்டிங், ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று, அதே அணிக்கு பயிற்சியாளராக இணைந்தார். 2014 முதல் 2016 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளாராக இருந்த ரிக்கி பான்டிங்கை 2017 ஆண்டு தனது அணியின் பயிற்சியாளராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி அறிவித்தது.
2017 முதல் 2024 வரை, 7 ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரிக்கி பான்டிங், ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் அய்யர் என பல இளம் வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
இவரது பயிற்சி காலத்தில், 6 ஐபிஎல் தொடர்களுக்கு பின் முதன்முறையாக 2019-ஆம் ஆண்டில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணி, 2020 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய கோப்பையை தவறவிட்டது. பின் 2021 ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
ஆனால், 2022, 2023 & 2024 ஆகிய 4 தொடர்களிலும் லீக் சுற்றிலேயே டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனராக உள்ள சவுரவ் கங்குலி, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
‘நீட் தேர்வு ரத்து… கூட்டுக்கடமை நமக்கு உள்ளது’ : ஸ்டாலினுக்கு ராகுல் பதில்!
இந்தியன் – 2 படத்தை வஞ்ச புகழ்ச்சியாக விமர்சித்த பார்த்திபன்