ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் 335 நாட்களுக்கு பிறகு டெல்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா அணியில் ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
தொடர்ந்து 5 தோல்விகளால் துவண்டிருந்த டெல்லி அணியினர் இந்த போட்டியில் ஆரம்பம் முதலே தங்களது உச்சபட்ச பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
அதன் காரணமாக முதல் 10 ஓவர்களில் 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா அணி.
மற்ற வீரர்கள் சொதப்ப, தொடக்க வீரர் ஜேசன் ராய் (43) மற்றும் கடைசி கட்டத்தில் ஆட்டமிழக்காமல் போராடிய ரஸல் (38*) ஆகியோரின் ஆட்டத்தால் அந்த அணி 100 ரன்களை கடந்தது.
20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா.
டெல்லி அணி தரப்பில் இஷாந்த் சர்மா, நார்ஜே, அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
வார்னர் அபாரம்
பின்னர் எளிதான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், கேப்டன் வார்னர் உறுதியாக விளையாடி அரைசதம் (57) கடந்தார். நடப்பு ஐ பி எல் தொடரில் இது அவரது 4 வது அரைசதம் ஆகும்.
இறுதியில் மனிஷ் பாண்டே (21) மற்றும் அக்சர் படேல் (19*) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் டெல்லி அணி 19.2 ஓவரில் 128 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் நடப்புத் தொடரில் 5 போட்டிகளில் ஏற்பட்ட தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடரில் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணியை சந்தித்த டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
இதனையடுத்து அதனையும் சேர்த்து 335 நாட்களுக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்துள்ளது டெல்லி அணி.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கம்பு கிச்சடி
டிஜிட்டல் திண்ணை: புயலைக் கிளப்பும் ’பிடிஆர்’ குரல்… ஸ்டாலின் ரியாக்ஷன் என்ன?