சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இழந்தது. இதன்மூலம் மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பும் பறிபோனது.
இதனையடுத்து சமீபத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருடன் பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டது.
அப்போது, விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட மூத்த நட்சத்திரங்களின் எதிர்காலம், கம்பீரின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் ஆகியவை இந்தக் கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது.
மேலும் கூட்டத்தில் பேசியபடி வரும் நாட்களில் இந்திய அணிக்கு சில கடுமையான விதிகளை பிசிசிஐ அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இனி 45 நாள் சுற்றுப்பயணத்தின் போது வீரர்களின் குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க பிசிசிஐ அனுமதிக்கும். போட்டிகளுக்கு மற்ற அணி வீரர்களுடன் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். குடும்பத்தினருடன் தனி பயணம் மேற்கொள்ள கூடாது.
விமானப் பயணத்தின் போது, வீரர்களின் உடமைகள் எடை 150 கிலோவைத் தாண்டினால், அதற்கான பணத்தை பிசிசிஐ செலுத்தாது. அந்த செலவை வீரர்கள் தான் ஏற்க வேண்டும்.
அதே போன்று தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அவரது மேலாளர் கௌரவ் அரோரா ஆகியோருக்கு எதிராகவும் பிசிசிஐ கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கம்பீரின் மேலாளர் அணி வீரர்களுக்கான ஹோட்டலில் தங்க அனுமதியில்லை. மைதானங்களில் உள்ள விஐபி பெட்டியில் அவர் அமர அனுமதிக்கப்படமாட்டார். அவர் கம்பீருடன் அணி வீரர்கள் வரும் பேருந்தில் பயணிக்க அனுமதியில்லை.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…