கிரிக்கெட் களத்தில் யாரும் நம்பமுடியாத பல அற்புதங்களை நிகழ்த்தி, அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு ஃபேவரைட் வீரராக மாறி, அவர்களிடம் தன் அசாத்தியங்களால் ‘ஏலியன்’ என பெயர் பெற்ற தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஏபி டிவில்லியர்ஸ்.
சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காகவும், ஐபிஎல் தொடர்களில் ஆர்.சி.பி அணிக்காகவும் டிவில்லியர்ஸ் விளையாடினார்.
இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில், தென் ஆப்பிரிக்க அணிக்காக 50.7 சராசரியுடன் 8765 ரன்களை குவித்துள்ளார். அதேபோல, ஒருநாள் போட்டிகளில் 53.5 சராசரியுடன் 9577 ரன்களை சேர்த்துள்ளார். அதுமட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகளில் 135.2 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1672 ரன்களை விளாசியுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஐபிஎல்-ல் ஒரு ஜாம்பவானாக அறியப்படும் இவர் 151.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 5162 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடர்களில் இதுவரை 5,000 ரன்களை கடந்த 7 வீரர்களில் ஒருவராகவும் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளார்.
இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு, 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கு சிறிது காலம் முன்னதாக, தனது 34 வயதிலேயே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
இதை தொடர்ந்து, ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வந்த டிவில்லியர்ஸ், அதில் இருந்தும் 2021ல் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து, எதிர்பார்ப்புகளுக்கு எதிர்மறையாக மிக விரைவில் ஓய்வை அறிவித்ததற்கான காரணம் என்ன என்பதை இப்போது அவர் தெரிவித்துள்ளார்.
“எனது குழந்தை தவறுதலாக எனது கண்ணில் இடித்துவிட்டார். அதன் காரணமாக எனது வலது கண்ணின் பார்வை திறன் மெல்ல மெல்ல குறைய துவங்கிவிட்டது.
எனது கடைசி 2 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கை, எனது இடது கண்ணை நம்பியே இருந்தது” என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 2015 ஒருநாள் உலகக்கோப்பையின் அரையிறுதியில் தென்னாப்ரிக்கா அதிர்ச்சி தோல்வி பெற்றதும், தனது இந்த முடிவுக்கு மற்றொரு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
“2015 ஒருநாள் உலகக்கோப்பை தோல்வி என்னை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீள எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டது.
ஆனால், அதில் இருந்து மீண்டபோது முன்பு இருந்த மனநிலை அப்போது என்னிடம் இல்லை.
2018ல் அனைத்தில் இருந்தும் வெளியேறிய நான், கடைசியாக ஒரு முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆசைப்பட்டேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த விரும்பினேன். அவ்வளவுதான்.
நான் என்மீது எந்த கவனத்தையும் பெற விரும்பவில்லை. நான் மிகச்சிறப்பான நேரத்தை கொண்டிருந்தேன். மிக்க நன்றி என்று மட்டுமே சொல்ல விரும்பினேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
தெலுங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!
மீண்டும் அதிரடியாக உயரும் தங்கம் விலை!