பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமீபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய தனுஷ்கா குணதிலகா தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தொடர்ந்து விளையாடவில்லை.
அவருக்குப் பதிலாக அஷேன் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் குணதிலகா இலங்கைக்குத் திரும்பாமல் ஆஸ்திரேலியாவில் இருந்தபடியே தனது அணியை உற்சாகப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி குணதிலகா சிட்னியில் கைது செய்யப்பட்டார். இதனால் இலங்கை வீரர்கள் அவரை ஆஸ்திரேலியாவிலேயே விட்டு நாடு திரும்பினர்.
தொடர்ந்து குணதிலகா ஜாமீன் கோரி சிட்னி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிட்னி நீதிமன்றம் குணதிலகாவிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் குணதிலகா கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று (நவம்பர் 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த விஷயத்தில் ஐ.சி.சி.யுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு ஒரு முழுமையான விசாரணை விரைவாகத் தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிலையில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்படுகிறார்” என்று தெரிவித்திருந்தது.
இதன்படி, தேசிய கிரிக்கெட் வீரர் குணதிலகா உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதுடன், வேறு எந்த அணி தேர்வுக்கும் அவர் பரிசீலனை செய்யப்படமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை எந்தவகையிலும் சகித்துக் கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ள வாரியம், விரைவில் விசாரணை நடத்தி முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.
மோனிஷா
அர்ஜுனா விருது: பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!
ரசிகர்களைத் திருத்த முடியும், ஆளுநரை? கமல் பிறந்தநாள் மெசேஜ்!