இலங்கை கிரிகெட் அணி வீரர் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சிட்னி போலீசார் இன்று (நவம்பர் 6) அதிகாலை 1 மணியளவில் கைது செய்தனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணிக்காக விளையாடிய தனுஷ்கா குணதிலகா தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக அஷேன் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். குணதிலகா இலங்கைக்கு செல்லாமல் ஆஸ்திரேலியாவில் இருந்தபடியே தனது அணியை உற்சாகப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
போட்டியிலிருந்து வெளியேறிய இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது. அப்போது குணதிலகா இலங்கை அணியுடன் செல்லவில்லை.
இந்தநிலையில், சிட்னியைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சிட்னி போலீசார் தனுஷ்கா குணதிலகாவை இன்று அதிகாலை 1 மணியளவில் கைது செய்தனர். உடனடியாக அவர் சிட்னி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து, சிட்னி காவல்துறை தரப்பில், குணதிலகா மற்றும் சிட்னியை சேர்ந்த பெண் இருவரும் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலமாக பழகி கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நேரில் சந்தித்துள்ளனர்.
அப்போது குணதிலகா அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன்படி குணதிலகாவை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
2018-ஆம் நார்வே பெண் ஒருவர் குணதிலகா மீது பாலியல் குற்றம்சாட்டிய நிலையில் குணதிலகாவை சிறிது காலம் இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்