நடிகை தமன்னாவுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்!
ஃபேர்பிளே பெட்டிங் செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட புகாரில் நடிகை தமன்னாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஃபேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட், போக்கர், சீட்டாட்டம், பேட்மிண்டன், டென்னிஸ் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு நேரடி கேம்களில் சட்டவிரோத பெட்டிங் கட்டுவதற்கு ஊக்குவிக்கிறது.
மகாதேவ் ஆன்லைன் பெட்டிங் செயலியை துபாயைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் இயக்கினர். இருவரும் சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் பகுதியை சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் மஹாதேவ் பெட்டிங் செயலி கடந்த ஆண்டு முதல் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. பண மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அச்செயலி மீது ஒரு வருடத்திற்கும் மேலாக அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது.
அதன் விசாரணையில் சத்தீஸ்கரை சேர்ந்த பல்வேறு உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தொடர்பு இருப்பதாக கடந்த காலத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் இந்த செயலிக்கான விளம்பரங்களில் தோன்றிய நடிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஃபேர்பிளே பெட்டிங் செயலி மூலம் ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டதாகவும், இதனால் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாகாம் நிறுவனம் புகார் அளித்துள்ளது.
இதனையடுத்து ஃபேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னா பாட்டியாவுக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதன்படி அவர் அடுத்த வாரம் ஏப்ரல்29ஆம் தேதி சைபர் செல் முன் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த புகாரின் பேரில் பாடகர் பாட்ஷா மற்றும் நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் மேலாளர்களின் வாக்குமூலங்களை மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அப்புவோட பிரச்சினை… அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு! கடலூரில் நடந்தது என்ன?
இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி : குறைந்தது தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?