ரோகித் சர்மா சதம் வீண்… சென்னைக்கு வெளியே முதல் வெற்றி பெற்ற சிஎஸ்கே!

Published On:

| By christopher

IPL 2024 : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 14) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 69 ரன்களும், ஷிவம் துரே 66 ரன்களும் குவித்தனர்.

கடைசி ஓவரில் களமிறங்கி வெறும் 4 பந்துகளை சந்தித்த தோனி, ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.

இதனையடுத்து 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

இருவரும் அதிரடியாக விளையாடி முதல் 6 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தனர். இதனால் சென்னை அணி சற்று பின் தங்கிய நிலையில் 8வது ஓவரை வீச வந்த பதிரானா முதல் பந்திலேயே இஷான் கிஷனை வெளியேற்றினார்.

அந்த ஓவரிலேயே சூர்ய குமார் யாதவையும் ட்க் அவுட் செய்து ஆட்டத்தை சென்னை அணியின் பக்கம் திருப்பினார்.

அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் திலக் வர்மா. இருவரும் ஜோடி சேர்ந்து 50 ரன்கள் குவித்த நிலையில் திலக் வர்மாவை 31 ரன்களில் வெளியேற்றினார் பதிரானா.

தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா(2), டிம் டேவிட்(13) ரொமரியோ ஷெப்பர்டு(1) ஆகியோர் வந்த வேகத்தில் திரும்பினர்.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பொறுப்புடன் விளையாடி வந்த ரோகித் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

எனினும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்த மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சென்னை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரானா 4 விக்கெட்டுகளும், முஸ்தபிஷுர் ரகுமான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

நடப்பு தொடரில் இதுவரை நடந்த 5 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி, சேப்பாக்கில் நடந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. விசாகப்பட்டினம் மற்றும் ஹதராபாத்தில் நடந்த போட்டிகளில் தோல்வியை தழுவியிருந்தது

இந்த நிலையில் சென்னைக்கு வெளியே அதுவும் பரம வைரியான மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தாமரைனு தான் சொன்னேன்… சோலி முடிஞ்சி! : அப்டேட் குமாரு

”ஸ்டெர்லைட் ஆலைக்கு 86 ஏக்கர் நிலம் கொடுத்தது திமுக தான் ”: எடப்பாடி குற்றச்சாட்டு!

CSK vs MI: முக்கிய வீரர் காயத்தால் அவதி… என்ன செய்யப்போகிறது சென்னை?

Whistle Podu: தளபதியின் தமிழ் புத்தாண்டு ட்ரீட்… படத்தின் கதை இதுதானா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel