நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் முதன்முறையாக தோல்வியை தழுவியது ஏன் என்பது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் நேற்று (ஏப்ரல் 23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ்(108*) சதமடிக்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து களம் இறங்கிய லக்னோ அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி சதம் காரணமாக 19.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் இதுவரை சேப்பாக்கில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த சென்னை அணி, முதன்முறையாக தோல்வியை தழுவியது. மேலும் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், “இந்த தோல்வியை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கடினம் தான். ஆனால் இது ஒரு நல்ல ஆட்டம். பின் இறுதியில் LSG நன்றாக விளையாடியது. நாங்கள் 13-14 ஓவர்கள் வரை ஆட்டத்தை எங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஆனால் ஸ்டோனிஸ் சிறப்பாக விளையாடி அனைத்தையும் மாற்றிவிட்டார்.
பனி இந்த போட்டியில் ஒரு பங்காக விளங்கியது. பெரிய அளவில் பனி இருந்தது. எங்களது பயிற்சி அமர்வுகளின் போதும் இதே அளவில் பனி இருந்தது. அது எங்கள் ஸ்பின்னர்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்றியது. பனி இல்லையெனில் விளையாட்டை சிறப்பாகக் கட்டுப்படுத்தி ஆழமாக எடுத்திருக்கலாம். ஆனால் இவை விளையாட்டின் பகுதிகள், அதைக் கட்டுப்படுத்த முடியாது.
பவர்பிளே முடிவதற்குள் இரண்டாவது விக்கெட்டை இழந்ததால் ஜடேஜா 3வது விக்கெட்டுக்கு முன் இறங்கினார். உண்மையைச் சொல்வதானால், நாங்கள் குவித்த ஸ்கோர் போதாது என்று நான் நினைத்தேன். 20 -30 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும். அதே வேளையில் எல்.எஸ்.ஜி பேட்டிங் செய்த விதம் அருமை” என்று ருதுராஜ் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
BE, BTech: விண்ணப்பப் பதிவு, கலந்தாய்வு எப்போது?
காங்கிரஸ் தாலியை பறிக்குமா? : மோடிக்கு பிரியங்கா காந்தி ஆவேச பதிலடி!