சொந்த மண்ணில் அபார வெற்றி… தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா
CSKvsKKR : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 8) நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியும், கேகேஆர் அணியும் மோதின.
துஷார் – ஜடேஜா கூட்டணி அபாரம்!
டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
https://twitter.com/CricCrazyJohns/status/1777349996008046732
இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளுடன் நடப்பு தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய முஸ்தபிஷூர் மீண்டும் பர்ப்பிள் தொப்பியை கைப்பற்றினார்.
ருதுராஜ் அரைசதம்!
தொடர்ந்து 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் களமிறங்கினர்.
ஒரு பக்கம் நிதானமான ஆட்டத்தை ருதுராஜ் தொடர, சற்று தடுமாறிய ரச்சின் வைபவ் அரோரா பந்துவீச்சில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் 2வது விக்கெட்டுக்கு ருதுராஜுடன் சேர்ந்து 70 ரன்கள் சேர்த்த நிலையில், 1 பவுண்டரி 1 சிக்சருடன் 25 ரன்களில் வெளியேறினார்.
அதன்பின்னர் களமிறங்கிய ஷிபம் துபே பவுண்டரியுடன் தனது பேட்டிங்கை துவங்கினார். இதற்கிடையே பொறுமையாக ஆடி வந்த ருதுராஜ் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை அடித்தார்.
களமிறங்கினார் தோனி
வெற்றியை நெருங்கிய நிலையில் அடுத்தடுத்து 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட துபே 28 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
இதனையடுத்து வெற்றிக்கு 3 ரன்களே இருந்த நிலையில் அடுத்து யார் களமிறங்குவார் என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சென்னை ரசிகர்களின் பலத்த சத்தத்திற்கிடையே (125 டெசிபல்) களமிறங்கினார் தோனி.
https://twitter.com/CricCrazyJohns/status/1777394473900855325
சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு ரன் மட்டுமே அடித்தார் தோனி.
இதனால் பவுண்டரி அடித்து சென்னை அணியின் 3வது வெற்றியை பதிவு செய்தார் ருதுராஜ்.
17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோனி சாதனை சமன்!
மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததுடன், 2 அற்புதமான கேட்சுகளை பிடித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இதன்மூலம் சென்னை அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை பெற்றவர்கள் வரிசையில் தோனியின் (15) சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.
இவர்களுக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா 12 முறையும், ருதுராஜ் மற்றும் ஹசி தலா 10 முறையும் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
CSKvsKKR : முதல் பந்திலேயே மிரட்டிய துஷார்… கேகேஆர்-ஐ மொத்தமாக சுருட்டிய ஜடேஜா
கொல்கத்தாவுக்கு காப்பு கட்டியாச்சி : அப்டேட் குமாரு
மக்களவை தேர்தல் : ஐந்து இடங்களில் இருந்து 10,214 பேருந்துகள் இயக்கம்!
முகமறியா மனிதர்களின் உதவி… : விபத்தில் சிக்கிய இயக்குநர் கே.எஸ். தங்கசாமியின் பதிவு!