IPL 2024 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர் ரெட்டி மைதானத்தில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் 13வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.
முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள்!
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்தனர்.
அரைசதம் அடித்த டேவிட் வார்னர் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த நிலையில், சிறிது நேர இடைவெளியில் பிருத்வி ஷாவும் 43 ரன்களில் வெளியேறினார்.
ரிஷப் பண்ட் அரைசதம்!
அதன்பின்னர் மற்ற வீரர்கள் சொதப்பினாலும், கேப்டன் ரிஷப் பண்ட் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் (51) அடித்து ஆட்டமிழந்தார்.
இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 191 ரன்களை குவித்தது.
சென்னை அணி தரப்பில் பதிரானா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சென்னை அணிக்கு அதிர்ச்சி!
தொடர்ந்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
கலீல் அகமது வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னுடன் வெளியேறினார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவரையடுத்து ரச்சின் ரவீந்திராவும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அணியை மீட்ட ரகானே – மிட்செல்
அதன்பின்னர் ரகானேவும், டேரில் மிட்செலும் சேர்ந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருவரும் 3வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் குவித்த நிலையில் டேரில் (34 ரன்கள்) பந்துவீசிய அக்சரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரகானே 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆர்ப்பரித்த மைதானம்!
தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபேவும் (18) சமீர் ரிஸ்வியும்(0) ஏமாற்றம் அளித்து ஒருபுறம் வெளியேற, மறுபுறம் மைதானத்தில் ரசிகர்களின் ஆராவாரம் விண்ணைப் பிளந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு நீண்ட முடியுடன் களமிறங்கிய தோனியின் வருகை தான் அந்த நீண்ட ஒலிக்கு காரணம்.
The reception, the entry, only MS Dhoni has this kind of a fan following even five years after his international retirement.pic.twitter.com/hUnBMEp2ZW
— Sameer Allana (@HitmanCricket) March 31, 2024
முதல் பந்தே பவுண்டரி!
தோனி 17வது ஓவரில் களமிறங்கும் போது சென்னை அணியின் வெற்றிக்கு தேவை 23 பந்துகளில் 72 ரன்கள் தேவைப்பட்டது.
எனவே நிச்சயம் தோனியின் பேட்டிங் அட்டகாச அதிரடியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதன்படியே முதல் பந்திலேயே கூலாக பவுண்டரி அடித்து இந்த ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங்கை தொடங்கினார் தோனி. இதனால் ஆர்ப்பரித்த ரசிகளால் மைதானத்தில் ஒலி அளவீடு 128 டெசிபலை எட்டியது குறிப்பிடத்தக்கது.
அதே ஓவரில் மேலும் 2 பவுண்டரி அடிக்கப்பட, 18 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்டது.
களத்தில் தோனியும், ஜடேஜாவும் இருந்ததால் வெற்றியின் ரேகைகள் சென்னை ரசிகர்களின் முகங்களில் மின்னியது.
ஆனால் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்டின் சாமர்த்தியமான முடிவால் 18வது ஓவரை பதற்றத்துடன் வீசிய கலீல் அகமது 12 ரன்னும், 19வது ஓவரை வீசிய முகேஷ் குமார் வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தனர்.
கடைசி ஓவரில் தோனி ருத்ர தாண்டவம்!
கடைசி ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை வெற்றி வாய்ப்பு 90 சதவீதம் வாய்ப்பில்லாத நிலையிலும், அனைவரது கண்களும் ஸ்ட்ரைக்கில் இருந்த தோனியை நோக்கியே இருந்தன.
முதல் பந்தில் பவுண்டரி விளாசிய தோனி, இரண்டாவது பந்தில் ஒத்த கையில் சிக்சர் அடிக்க மைதானம் அலறியது.
தொடர்ந்து 4வது பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்த தோனி, கடைசி பந்தில் சிக்சர் அடித்தார்.
Welcome back MS DHONI 🦁🔥#Dhoni 👑pic.twitter.com/lbkQrmlYaB
— Roopesh Raveendra (@RoopeshKadakkal) March 31, 2024
எனினும் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கும் 171 ரன்களே குவித்த சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால் மைதானத்தில் இருந்த அந்த அணியின் ரசிகர்கள் டெல்லி அணி வீரர்களே குழம்பி போகும் அளவுக்கு மைதானத்தில் உற்சாக நடனம் ஆடினர்.
புள்ளிப்பட்டியலில் இறக்கம்!
சேப்பாக்கில் நடந்த முதல் 2 போட்டிகளில் வெற்றியுடன் வலம் வந்த சென்னை அணி முதல் தோல்வியை பதிவு செய்தது. மேலும் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.
அதே வேளையில் முதல் 2 போட்டிகளில் தோல்வியால் துவண்டு இருந்த டெல்லி அணி விசாகப்பட்டிணத்தில் தனது முதல் வெற்றியை அறுவடை செய்துள்ளது.
இந்த போட்டியில் ஒரு ஓவர் மெய்டனுடன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய கலீல் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பலாப்பழத்த பிதுக்கிட்டாங்களே : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியின் டபுள் டாஸ்க்… ஸ்டாலின் கொடுத்த பூஸ்ட்!