குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையைக் கைப்பற்றியது சென்னை அணி.
சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று (மே 29) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங்கிற்கு களமிறங்கிய குஜராத் 20 ஓவர் இறுதியில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து 215 ரன்கள் எடுத்தால் கோப்பையைக் கைப்பற்றலாம் என்ற இலக்கை சேஸ் செய்யத் தொடங்கியது சென்னை அணி.
ஆனால் முதல் ஓவரில் 3வது பந்தில் ருதுராஜ் 1 பவுண்டரி அடித்து 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த பந்தை வீச விடாமல் மழை குறுக்கிட்டது.
இதனால் மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் இன்று (மே 30) 12.10 மணிக்கு டிஎல்எஸ் விதிப்படி 20 ஓவர் போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
171 ரன்களை சேஸ் செய்து விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் இலக்கை அடைந்து 5வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
சென்னை அணியில் ருதுராஜ் 26 ரன்கள், கான்வே 47 ரன்கள், சிவம் தூபே 32 ரன்கள், ரஹானே 27, ராயுடு 19 ரன்கள், ஜடேஜா 15 ரன்கள் எடுத்திருந்தனர். இறுதிப்போட்டியில் தோனியின் ஆட்டத்தைக் காண காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக கேப்டன் கூல் முதல் பந்திலேயே கேட்ச் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இருப்பினும் சென்னை அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மோனிஷா
சிஎஸ்கே பவுலர்களை புரட்டி எடுத்த ’சென்னை வீரர்’: பைனல் ட்விஸ்ட்!
IPL FINAL: டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஏன்?