13 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை வீழ்த்திய சென்னை: சுவாரசிய சம்பவங்களின் தொகுப்பு!

விளையாட்டு

உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 16வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போது வரை கிட்டதட்ட அனைத்து அணிகளும் பாதி லீக் போட்டிகளில் விளையாடிவிட்டது. இதில் சென்னை, குஜராத், லக்னோ மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் டாப் 4 இடங்களில் உள்ளன.

ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் விளையாடினாலும், ’எல் கிளாசிகோ’ என்று போட்டியாக கருதப்படும் சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டி பல கோடி ரசிகர்களை ஈர்க்கும் போட்டியாக பார்க்கப்படுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இரு அணிகளுக்கும் இடையே இன்று (மே 6) நடைபெற்ற 2வது லீக் போட்டியில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியுள்ளது.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நிகழ்ந்த பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை இத்தொகுப்பில் காணலாம்.

கலைஞர் கேலரியில் பன்னீர்

பொதுவாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது. எனினும் சென்னையில் நடைபெறும் போட்டிகளை காண அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் சேப்பாக்கத்திற்கு தவறாமல் வருகை தருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற சென்னை – மும்பை போட்டியை அமைச்சர் உதயநிதி, சபரீசன் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

திரை நட்சத்திரங்களில், நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா, நிவேதா பெத்துராஜ், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் நேரில் போட்டியை உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

மைதானத்தில் நிறைந்து காணப்பட்ட இந்த நட்சத்திரங்களின் படையெடுப்பு, இது சேப்பாக்கமா, கோடம்பாக்கமா என்ற கேள்வியை எழுப்பியது.

இதற்கிடையே முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை-மும்பை போட்டியைக் காண நேரில் வந்தது பலரையும் ஆச்சரியபடுத்தியது. அதிலும் சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி கேலரியில் அமர்ந்து அவர் போட்டியை பார்த்தது அரசியலாகவும் பார்க்கப்படுகிறது.

இவர்களுடன் சிஎஸ்கே கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் மற்றும் சென்னை அணியின் லக்கி சார்மாக கருதப்படும் அவர் மகள் ஷிவா ஆகியோரும் சேப்பாக்கத்தில் போட்டியை உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

ரோகித் சர்மா டக் அவுட்

சென்னை – மும்பை இடையிலான இன்றைய போட்டியில் வழக்கம் போல் அல்லாமல் மும்பை கேப்டன் ரோகித் சர்மா மூன்றாவது வீரராக களமிறங்கினார். எனினும் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் அதிரடி யுக்தியால் ரோகித் சர்மா ஸ்கூப் ஷாட் ஆட முயன்று டக் அவுட்டாகி பரிதாபமாக வெளியேறினார்.


இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்து மோசமான சாதனை படைத்துள்ளார்.

16வது ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் ரோகித் சர்மா இதுவரை 16 முறை டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். அதேபோல் கேப்டனாக அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலிலும் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இதுவரை கேப்டனாக மட்டும் ரோகித் சர்மா 11 முறை டக் அவுட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பின் ஒரு கேப்டனாக 10 முறை டக் அவுட்டாகியுள்ள கவுதம் கம்பீர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பதிரானாவின் அபார பந்துவீச்சு

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிசிறந்த கண்டுபிடிப்பாக இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரனா உள்ளார்.  இந்த தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமாகியுள்ள பதிரானா, இலங்கை முன்னாள் வீரர் மலிங்காவின் பந்துவீச்சை பிரதிபலித்து அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் ஒருவராக உருவாகியுள்ளார்.

9 போட்டிகளில் விளையாடியுள்ள பதிரானா இதுவரை 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிலும் கடைசி 5 ஓவர்களில் வீசும் சிறந்த டெத் பவுலராக கருதப்படும் 20 வயதான பதிரானா, 16 முதல் 20 ஓவர்களில் மட்டும் இதுவரை 10 விக்கெட்டுகளை எடுத்து அதகளப்படுத்தியுள்ளார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றி!

என்னதான் பரம வைரிகளாக இருந்தாலும், சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக சென்னை அணியின் வெற்றி சதவிகிதம் ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் 2010ஆம் ஆண்டுக்கு பின் சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை, சிஎஸ்கே வீழ்த்தியதே இல்லை.

2018ஆம் ஆண்டு சென்னை அணி மீண்டும் திரும்பி வந்ததில் இருந்து சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் கூட மும்பை அணியை சென்னை வென்றதே இல்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சொந்த மண்ணில் மும்பை அணியை வீழ்த்த முடியாமல் சென்னை அணி திணறி வந்தது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணி சொந்த மைதானத்தில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 13 ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது.

மும்பையை தொடர்ந்து மிரட்டும் சென்னை!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஐந்து முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக இந்த இரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 20 போட்டிகளிலும், சென்னை 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய வெற்றியுடன் சேர்த்து கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் 4 முறை சென்னை அணி வென்றுள்ள நிலையில், ஒரு முறை மட்டுமே மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் கடந்த சில வருடங்களாக மும்பை அணிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலையாக தொடர்ந்து வருகிறது தோனி தலைமையிலான மஞ்சள் படை!

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை சிறுவனின் ஆசையை சேப்பாக்கில் நிறைவேற்றிய ரோகித் சர்மா

முடி சூட்டிக்கொண்ட மூன்றாம் சார்லஸ்

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *