சேப்பாக்கில் நேற்று (மே 14) இரவு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பழி தீர்த்துள்ளது கொல்கத்தா அணி.
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக தகுதி பெறும் வாய்ப்பாக பார்க்கப்பட்ட முக்கியமான ஆட்டத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொண்டது.
சொந்த மைதானமான சேப்பாக்கில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால் கூடுதல் பரபரப்பும் தொற்றிகொண்டது.
சென்னை அணி தடுமாற்றம்
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் கொல்கத்தா அணியில் சுழலுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டை சுழற்ற முடியாததால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்களும், கான்வே 30 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் களமிறங்கி 3 பந்துகளை எதிர்கொண்ட கேப்டன் தோனி 2 ரன்கள் அடித்து ஏமாற்றினார்.

வெற்றியைப் பறித்த கூட்டணி !
தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 5 ஓவர்களில் அடுத்தடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் எப்படியும் சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா (57*) மற்றும் ரிங்கு சிங் (54) ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி சென்னை அணியிடம் கடந்த மாதம் ஈடன் கார்டனில் தோற்றதற்கு பழித்தீர்த்து கொண்டனர்.
18.3 ஓவரில் 147 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது பிளே ஆப் போராட்டத்தில் உயிர் பெற்றுள்ளது.

உணர்ச்சி பெருக்கில் சேப்பாக்கம்!
இந்த போட்டியைத் தொடர்ந்து நடப்பு தொடரில் சேப்பாக்கில் கடைசி லீக் போட்டியில் ஆடிய சென்னை அணியின் நன்றி தெரிவிக்கும் வைபவம் தொடங்கியது.
தோனியின் தலைமையில் ’எல்லோருக்கும் தேங்க்ஸ்’ டீசர் அணிந்தபடி வலம் வந்த சென்னை அணி வீரர்கள் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தோனி, துபே, ஜடேஜா உள்ளிட்ட பலரும் டீசர்ட், பந்து ஆகியவற்றை ரசிகர்கள் மத்தியில் வீசி அன்பை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே கேப்டன் தோனியிடம் இருந்து இந்திய அணியின் மூத்த வீரரும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தனது சட்டையில் ஆட்டோகிராப் வாங்கிய காட்சி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
இந்த போட்டியைத் தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கு மும்பை, லக்னோ, ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளிடையே இன்னும் கடும் போட்டி நிலவும் நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
வெறுப்பரசியலை வேரறுக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றி!