பாகிஸ்தானுக்கு படுகுழி வெட்டிய சிஎஸ்கே வீரர்கள்.. ஆனால் இந்தியாவுக்கு ஜாலி!

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் பதிரனா மற்றும் தீக்‌ஷனா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.

இந்த நிலையில் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தீக்‌ஷனா இறுதிப்போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

நடந்து வரும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டிக்கு இந்தியா ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று இலங்கை அணியும்  12வது முறையாக ஆசியக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

கலக்கிய சிஎஸ்கே வீரர்கள்!

இதற்கு முக்கிய காரணமாக இலங்கை அணியின் பவுலிங் யூனிட் பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் 20 வயதான இளம் வீரர் துனித் வெல்லலகே அபாரமாக பந்து வீசி அச்சுறுத்தினார். இந்திய அணியின் முதல் 6 டாப் பேட்ஸ்மேன்களை தனது சுழற்பந்துவீச்சால் தட்டித்தூக்கி கிரிக்கெட் உலகில் ’யார் இவர்’ என உற்றுநோக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இலங்கை அணியின் பந்துவீச்சு சவால் அளிப்பதாகவே இருந்தது.

இந்த ஆட்டத்தில் வெல்லலகே 9 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார்.

அதே வேளையில் மற்றொரு இளம் வீரரும் ’குட்டி மலிங்கா’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் அழைக்கப்பட்ட மதீசா பதிரனா 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். அவருடன் சக சிஎஸ்கே வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான தீக்சனாவும் ஜோடி சேர இருவரும் இலங்கையின் வெற்றிக்கு உதவியாக இருந்தனர்.

தீக்‌ஷனா காயம்!

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சின் போது தீக்‌ஷனாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை-பாகிஸ்தான் ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்யும் போது மகேஷ் தீக்‌ஷனா காயமடைந்தார். அவரது உடல்நிலையை முழுமையாக ஆய்வு செய்ய, இன்று ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும்” என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வரும்  28ஆம் தேதிக்குள் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள 10 அணிகளும், தங்களது வீரர்களின் முழுமையான பட்டியலை பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வரும் உலகக்கோப்பையில் தீக்‌ஷனா இலங்கை அணி பந்துவீச்சின் முக்கிய துருப்புச்சீட்டாக இருப்பார் என்று அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.

எனவே உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு தீக்‌ஷனாவை ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட வைப்பதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு சாதகம்!

அப்படி அவர் போட்டியில் பங்கேற்கவில்லையென்றால், அது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாகும். மேலும் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு இது சாதகமாகவே பார்க்கப்படும்.

இந்தாண்டில் தீக்‌ஷனா இதுவரை 15 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்று 17.5 சராசரியுடன் 31 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் பதிரனா(11) மற்றும் வெல்லலகே(9) ஆகியோர் முதல் இரண்டு இடங்களை எடுத்துள்ளனர்.

இந்திய அணி தரப்பில் 9 விக்கெட்டுகள் எடுத்து குல்தீப் யாதவ் 4வது இடத்தில் உள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

சனாதன பேச்சு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெயக்குமார்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *