ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சமீபத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட வீடியோவில், “வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நம்புகிறேன். அதனால் எங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேனோ, அதே இடத்தில் முடிக்க விரும்புகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை சென்னை சூப்பர் கிங்சுடன் தொடங்கியது. கடைசி கால ஆட்டமும் சென்னையுடன்தான் முடிவடையும்” என்று கூறியிருந்தார், அதற்கேற்ற சூழல் இப்போது மீண்டும் வந்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த அஸ்வின், தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அஸ்வினை வாங்குவது எளிதாக இருக்காது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஃப் ஸ்பின்னர்களின் எண்ணிக்கையே குறைவாக தான் உள்ளது. இதனால் தரமான ஆஃப் ஸ்பின்னரை வாங்க ஐபிஎல் அணிகள் முட்டி மோதும் என்று பார்க்கப்படுகிறது.
அதனால், அஸ்வினை வாங்க குறைந்தபட்சம் ரூ.8 கோடி வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் . ஆனால், ஒவ்வொரு முறையும் ஏலத்தில் அஸ்வினின் சம்பளம் 5 கோடிக்கு மேல் சென்றால் சிஎஸ்கே அணி நிர்வாகம் போட்டியில் இருந்து விலகி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்த முறை எப்படியும் அஸ்வினை வாங்கி விடும் முனைப்பில் சென்னை அணி இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக தான் அஸ்வின் விளையாடி வந்தார். 121 போட்டிகள் சென்னை அணிக்காக அவர் விளையாடியுள்ளார். தற்போது, அஸ்வினுக்கு 38 வயதாகிறது.
அதேபோல் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி டேவான் கான்வேவை குறைந்த தொகைக்கு வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை அணி ஏற்கனவே தோனி, ருதுராஜ், ஜடேஜா, பதிரானா, சிவம் துபே ஆகியோரை வாங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஒரே மேடையில் திருமா – விஜய்யா? சூடு பிடிக்கும் அரசியல் களம்!
புரோ கபடி: முதல் இடத்தை பிடித்து தமிழ் தலைவாஸ் அசத்தல்!