ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் இன்று (மார்ச் 31) தோனி நிச்சயமாக விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று (மார்ச் 31) அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் தொடங்குகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளின் தளர்விற்குப் பிறகு பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடனான தொடக்க விழாவுடன் இன்றைய ஆட்டம் நடைபெறவுள்ளது.
இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியைக் காண்பதற்கு ரசிகர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.
குறிப்பாக ஐபிஎல் 2023 தான் தோனிக்கு கடைசி போட்டி என்பதால் அவரது ஆட்டத்தை மைதானத்தில் கண்டு ரசிக்கப் பலரும் காத்திருக்கின்றனர்.
ஆனால் இன்றைய தொடக்க ஆட்டத்தில் வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்வாட் அல்லது ஜடேஜா கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல் வெளியானது.
இது தோனியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
மேலும் தொடக்க ஆட்டத்தில் தோனி இல்லாமல் இருப்பது சென்னை அணிக்கு ஒரு நெருக்கடியான சூழலாகவும் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நிச்சயம் தோனி தொடக்க ஆட்டத்தில் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ”என்னைப் பொறுத்தவரை சென்னை அணியின் கேப்டன் 100 சதவீதம் தொடக்க ஆட்டத்தில் விளையாடுகிறார். வேறு எது குறித்தும் எனக்குக் கவலை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தோனி பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடவில்லை என்பதே தோனி தொடக்கப் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் பரவ காரணமாக இருந்துள்ளது.
இதனிடையே, ஒவ்வொரு சீசனுக்கு முன்பும் தோனி தீவிர பயிற்சியில் ஈடுபடுவார். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் ஆற்றலை வீணாக்காமல் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக அதிகமாகப் பயிற்சிகளை மேற்கொள்ள மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
கிச்சன் கீர்த்தனா: பிண்டி மசாலா
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!