IPL 2024 : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 22) நடைபெற்ற ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்துள்ளார்.
கேப்டன்ஷிப் எனக்கு ப்ரெஷர் கிடையாது!
போட்டி குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ஆரம்பத்தில் 2-3 ஓவர்கள் தவிர ஆட்டம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆர்சிபி அணி இன்னும் 10-15 ரன்கள் குறைவாக அடித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இறுதியில் நன்றாக விளையாடினார்கள் என்று நினைக்கிறேன்.
மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளெஸ்சி வெளியேறியது போட்டியில் ஏற்பட்ட ஒரு பெரிய திருப்புமுனை.
நான் எப்பொழுதும் கேப்டன்ஷிப்பை மகிழ்ச்சியுன் செய்வேன். அதை ஒரு கூடுதல் அழுத்தமாக எப்போதும் உணர்ந்ததில்லை. அதை எப்படி கையாள்வது என்பதில் எனக்கு சிறிது அனுபவம் இருந்தது. அதனால் எந்த அழுத்தத்தையும் இந்த போட்டியில் உணரவில்லை. நிச்சயம் மஹி (எம்எஸ் தோனி) பாய் அணியில் இருப்பது எனக்கு கூடுதல் பலம். ஆனால் நான் சுயமாக அணியை கேப்டன்ஷிப் செய்ய எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்.
எங்கள் அணியில் உள்ள அனைவரும் இயல்பாகவே சிறந்த வீரர்கள் என்று நான் நினைக்கிறேன். ரஹானே உட்பட ஒவ்வொருவருக்கும் அவர்களின் பாத்திரம் என்ன மற்றும் எந்த பந்துவீச்சாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும்.
சென்னை அணி பேட்டிங்கை இரண்டு-மூன்று விஷயங்களில் இன்னும் வேலை செய்ய வேண்டும். இந்த போட்டியில் எல்லோரும் நன்றாக பேட்டிங் செய்தார்கள், ஆனால் முதல் 3 பேரில் யாராவது 15வது ஓவர் வரை பேட் செய்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
போட்டி முழுவதும் பின்தங்கியே இருந்தோம்!
அதே வேளையில் தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்சி, “பேட்டிங்கில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். பவர் பிளேவை எப்போதுமே நன்றாக பயன்படுத்தி அதிக ரன்களை சேர்க்க வேண்டும். இல்லை என்றால் சென்னை சுழற் பந்துவீச்சாளர்கள் சேப்பாக்கம் ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நமது கதையை முடித்து விடுவார்கள்.
நாங்கள் முதல் ஆறு ஓவரில் அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். நாங்கள் முதல் 10 ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. ஆனால் ஆடுகளம் நன்றாக தான் இருந்தது. நாங்கள் சென்னையை விட போட்டி முழுவதும் கொஞ்சம் பின்தங்கியே இருந்தோம்” என்று டு பிளெஸ்சி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உங்களது வாழ்க்கைத்துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஆவக்காய் ஊறுகாய்