நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 16வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. குஜராத் மாநில அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
சென்னை அணியில் பிராவோ, அம்பத்தி ராயுடு போன்றோர் விலகியுள்ள நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது சிஎஸ்கே.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் அட்டகாசப்படுத்தும் அவருடைய அபாரமான ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களை இன்று (மார்ச் 28) சந்தித்த அவர், ”சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் பந்து வீச மாட்டார். அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் முதல் சில போட்டிகளில் பேட்டராக மட்டுமே களமிறங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களது வருத்தத்தையும், பென் ஸ்டோக்ஸ் விரைவில் உடல்நலம் பெறவேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடக்கப்போட்டியை தொடர்ந்து ஏப்ரல் 3-ந் தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
கிறிஸ்டோபர் ஜெமா
பற்களை பிடுங்கிய விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!