உலக கோப்பை கால்பந்து போட்டியில், ஜாம்பவான் அணியான பிரேசிலை, குரோஷியா அணி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நேற்று (டிசம்பர் 9) இரவு கத்தாரில் உள்ள எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பிரேசில், குரோஷியா அணிகள் மோதின. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் கொரியா அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 4 கோல்கள் அடித்த பிரேசில் அணி, குரோஷியாவை எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் அணி அட்டாக் செய்து ஆடியது. 5-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் வினிசியஸ் ஜூனியர் கோல் அடிக்க முயற்சித்தார். அதனை குரோஷியா அணியின் கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிக் பிடித்தார்.
ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெரிசிச் அடித்த கோல், கோல் போஸ்டுக்கு மேல் சென்றது. 41-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பை நெய்மர் தவறவிட்டார். ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். 82-வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரிச்சார்லிசன் தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்த பந்து கோல் போஸ்ட்டை தாண்டி சென்றது.
இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் பிரேசில் அணி நட்சத்திர அணி வீரர் நெய்மர் கோல் அடித்து அசத்தினார். இதனால் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆட்டம் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், 116-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் அடித்து பிரேசில் அணியை சமன் செய்தார்.
இரண்டு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது.
பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா நான்கு கோல்கள் அடித்தது. பிரேசில் இரண்டு கோல்கள் மட்டுமே அடித்தது. குரோஷியா கோல் கீப்பர் டொமினிக் லிவாகோவிக் சிறப்பாக செயல்பட்டு பிரேசில் அணி வீரர்கள் அடித்த பந்துகளை தடுத்தார்.
இதனால் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பிரேசில் அணி தோல்வி அடைந்ததால், வீரர்கள் மைதானத்தில் அழுது புரண்டனர். கண்ணீர் சிந்திய பிரேசில் அணி வீரர்களை குரோஷியா அணி கேப்டன் மோட்ரிச் கட்டிணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வு மைதானத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் குரோஷியா அணி மோத உள்ளது.
செல்வம்
மாண்டஸ் எதிரொலி: இரண்டாவது நாளாக விமான சேவை ரத்து!
அடுத்த 3 மணி நேரம்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?