போராடிய மொராக்கோ..பந்தாடிய குரோஷியா!

Published On:

| By Jegadeesh

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது இடத்திற்கான போட்டி நேற்று (டிசம்பர் 17 ) கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் மொராக்கோ அணியை 2-1என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தியது.

இதில் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வியடைந்த குரோஷியா அணியும், மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்த மொராக்கோ அணியும் மோதின.

அதுமட்டுமல்லாமல் குரோஷியா அணியின் கேப்டன் மோட்ரிச்சின் கடைசி உலகக்கோப்பை என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.

இதனிடையே ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடம் முதலே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் முதல் கோல் அடிக்க தீவிரமாக இருந்தனர்.

அதற்கேற்ப 7-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் மோட்ரிக் அடித்த ஃபிரீ கிக்கில், குரோஷிய வீரர் குவார்டியோல் ஹெட்டர் மூலம் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் குரோஷியா அணி 1-0என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இதற்கு மொராக்கோ அணி அடுத்த நிமிடத்திலேயே பதிலடி கொடுத்தது.

Croatia vs Morocco match

அச்ரஃப் டாரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் மொராக்கோ அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இதன் மூலம் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட்டது. இதன் பின்னர் இரு அணி வீரர்களும் தடுப்பாட்டத்தில் கவனமாக ஆடினார்கள்.

இருந்தும், 42-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் மிஸ்லவ் ஓர்சிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி முன்னிலை பெற்றது. இதன் பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால் மொராக்கோ அணியின் தடுப்பாட்ட வீரர்கள் குரோஷியா முன்கள வீரர்களையும், குரோஷியா அணி தடுப்பாட்ட வீரர்கள் மொராக்கோ அணியையும் தடுத்து நிறுத்தினர். 70 நிமிடங்கள் கடந்தும் ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கிலேயே சென்றது.

Croatia vs Morocco match

தொடர்ந்து 75-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் என்நெசரி கோல் அடிக்க எடுத்த முயற்சியை, கடைசி நிமிடத்தில் குரோஷியா அணியின் குவார்டியோல் தடுத்து நிறுத்தினர்.

இதன்பின்னர் ஆட்டம் மேலும் பரபரப்பானது. பின்னர் 87-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் குரோஷியா வீரர் ஸ்டானிசிக் தவறவிட்டார். தொடர்ந்து 89-வது நிமிடத்தில் கிடைத்த ஃபிரீ கிக் வாய்ப்பையும் குரோஷியா அணி தவறவிட்டது.

90 நிமிடங்கள் முடிவடைந்தும், கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்திலும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை.

இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றிபெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்தை பிடித்துள்ளது குரோஷியா.

அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணி மோதும் இறுதி போட்டி இன்று (டிசம்பர் 18 ) நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகள்: கோடிக்கணக்கான  லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படும் அபாயம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment