ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஆனால், நடந்து முடிந்த இந்த தொடரில் இந்தியா வென்றாலும் புவனேஸ்வர் குமார் போன்ற சில முக்கிய வீரர்கள் இன்னும் முன்னேறாமல் இருப்பது இந்திய அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய கே.எல் ராகுல் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் ஜிம்பாப்வே தொடரில் 1, 30 என சொற்ப ரன்களே எடுத்தார்.
அதைவிட ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக டக் அவுட் ஆனார். பின்னர், ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்நிலையில், கே.எல்.ராகுலை இந்திய அணியில் இருந்து நீக்குமாறு தொடர்ந்து அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் மன அழுத்தத்துடன் விளையாடிய அவர், முதல் போட்டியில் 55 ரன்கள் எடுத்தாலும் இந்தியா தோல்வியை தழுவியது.
ஆனால் 2வது போட்டியில் 10 ரன்களில் ஆட்டமிழந்த அவர், 3வது போட்டியில் மீண்டும் 1 ரன்னில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார்.
இந்நிலையில் ‘விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் நலனையும் வெற்றியையும் கருதி விளையாடிய காரணத்தாலேயே கே.எல் ராகுல் சொற்ப ரன்களில் அவுட்டாகி தனது விக்கெட்டை தியாகம் செய்தார்’ என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி கூறிய அவர் ”அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதைத்தான் அவர் செய்து வருகிறார்.
அதில் முதல் போட்டியில் அரை சதமடித்த அவர், 8 ஓவர்களுடன் நடைபெற்ற 2வது போட்டியில் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடியே தீர வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிரடியாக விளையாடியதால்தான் அணிக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்தார்.
அதேபோல் 3வது போட்டியில் தேவைப்படும் ரன் ரேட் 9 ரன்களுக்கு மேல் இருந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தில் அவர், அதிரடியாக விளையாடி சிறந்த தொடக்கத்தை பெறுவது எளிதான காரியமல்ல.
அதனால் அங்கேயும் அவர் தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார். எனவே அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்.
இருப்பினும் விராட் கோலி போல சிறந்த ஷாட்களை அடிக்கும்போது ராகுலை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது.
அதே நேரத்தில் பேட்டை க்ராஸ் செய்து விளையாடுவது அவர்களுக்கு ஆபத்தை கொடுத்து விடும். எனவே அந்த தவறை அவர்கள் தவிர்த்தால் தொடர்ந்து பெரிய ரன்கள் அடிக்க முடியும்” என கே.எல்.ராகுலுக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்