ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக போட்டிகளை கண்டு வருகின்றனர்.
உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், லியோனல் மெஸ்ஸியும். இவர்களுடைய போர்ச்சுகல், அர்ஜென்டினா அணிகள் தனித்தனி க்ரூப் ஆட்டங்களில் ஆடி வருகின்றன.
இதனிடையே, மான்செஸ்டர் யுனைடெட் நேற்று (நவம்பர் 22 ) வெளியிட்ட அறிக்கையில், “கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு உடனடியாக நீக்கப்படுகிறார். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்.
மான்செஸ்டர் யுனைடெட்டில் உள்ள அனைவரும் எரிக் டென் ஹாக்கின் கீழ் அணியின் முன்னேற்றத்தைத் தொடர்வதிலும், ஆடுகளத்தில் வெற்றியை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மான்செஸ்டர் அணியில் இருந்து வெளியேறியது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று (நவம்பர் 23) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”மான்செஸ்டர் யுனைடெட் உடனான உரையாடலைத் தொடர்ந்து, எங்கள் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க பரஸ்பரம் ஒப்புக்கொண்டோம்.
நான் மான்செஸ்டர் யுனைடெட்டை நேசிக்கிறேன், ரசிகர்களையும் நேசிக்கிறேன், அது எப்போதும் மாறாது. இருப்பினும், ஒரு புதிய சவாலைத் தேடுவதற்கு இதுவே சரியான நேரம் என உணர்கிறேன்.சீசனின் எஞ்சிய காலத்திலும் எதிர்காலத்திலும் அணி வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கானா அணிக்கு எதிரான போர்ச்சுகலின் தொடக்க ஆட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ரொனால்டோவின் மான்செஸ்டர் உடனான பயணம் முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி: மன்னர் கொடுத்த பரிசு!
பாமாயில், பருப்பு விநியோகம்: தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை!