மே மாத சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: யாருக்கு கிடைக்கும்?

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து அவர்களை கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் , கடந்த மே மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று (ஜூன் 6) அறிவித்துள்ளது.

அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசம், வங்காளதேச வீரர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பட்டியலில் இவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதற்கான காரணங்களை பார்ப்போம்:

பாபர் அசம் (பாகிஸ்தான்)

அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக உள்ள பாபர் அசாம் தன்னுடைய சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

கடந்த மே மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டவர் பாபர் அசாம்.

இந்த தொடரில், மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 62 பந்துகளில் 54 ரன்களும் , நான்காவது ஒருநாள் போட்டியில் 117 பந்துகளில் 107 ரன்களும் எடுத்தார். இது அவரின் 18 வது ஒரு நாள் போட்டியின் சதமாகும். அந்த போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதுவே இவர் இந்த பட்டியலில் இடம் பிடிக்க முக்கிய காரணமாக உள்ளது.

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ(வங்காளதேசம்)

24 வயதே ஆகும் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடினார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ முதல் போட்டியில் 44 ரன்களை குவித்தார்.

Cricketer of the Month Award

இரண்டாவது ஒருநாள் போட்டியில் 319 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்தியது வங்காளதேசம் அணி அந்த போட்டியில் 93 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 117 ரன்களை எடுத்து அசத்தினார். இந்த போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.

அதுமட்டுமின்றி மூன்றாவது ஒருநாள் போட்டியில் 35 ரன்களை எடுத்தார். மேலும் அந்த தொடரின் சிறந்த வீரருக்கான விருதையையும் பெற்றதன் மூலம் ஐசிசியின் சிறந்த வீரர்களின் பரிந்துரை பட்டியலில் ஹொசைன் ஷாண்டோ இடம்பெற்றுள்ளார்.

ஹாரி டெக்டர் (அயர்லாந்து)

23 வயதான ஹாரி டெக்டர் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

வங்காளதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் கோப்பையை தவறவிட்டாலும் ஹாரி டெக்டர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில், வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 21 ரன்களை எடுத்த இவர் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தன்னுடைய சூறாவளி ஆட்டத்தை காட்டினார்.

அந்த போட்டியில் 113 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 140 ரன்களை குவித்தார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹாரி டெக்டரும் ஜார்ஜ் டோக்ரெலும் (47 பந்துகளில் 74 ரன்களை எடுத்து அந்த அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். இந்த போட்டியில் 319 ரன்கள் எடுத்திருந்தாலும் வங்காளதேச வீரர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வின் அதிரடியால் அந்த அணி தோல்வியை தழுவியது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹாரி டெக்டர் 48 பந்துகளில் 45 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐசிசியின் மே மாத சிறந்த வீரர்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இலங்கையின் சாமரி அதபத்து, ஹர்ஷிதா மாதவி ஆகியோரும், தாய்லாந்தின் திபாட்சா புத்தாவோங் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு மே மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சட்டென்று மாறிய வானிலை: சென்னையில் மழை!

மோடியை கேட்பீர்களா ஆளுநரே?: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *