அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்திருக்கிறது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 3 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியே வென்று தொடரை கைப்பற்றியிருந்தது. பின்னர் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்தே வென்று தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று (ஜூலை 23) இவ்விரு அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. அந்த அணியில் முன்வரிசையில் இறங்கிய பால் ஸ்டர்லிங் 40 ரன்களும், டக்கர் 23 ரன்களும், டெக்டார் 28 ரன்களும் எடுத்தனர். அவர்களுக்குப் பிறகு களமிறங்கிய அடைர், 15 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசினார்.
இதனால், அவ்வணி 20 ஓவர்களில் 174 ரன்களை எட்டியது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 19ஆவது ஓவரிலேயே இலக்கை அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் இந்த தொடரின் மற்ற போட்டிகளில் அபாரமாக ஆடிய க்ளென் ஃபிலிப்ஸ், அரைசதம் (56 ரன்கள்) அடித்தார். ஜிம்மி நீஷம் 23 ரன்களும் எடுத்தனர்.
ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்ததுபோல், டி20 தொடரிலும் ஒயிட்வாஷ் செய்து சரித்திர சாதனையைச் செய்திருக்கிறது நியூசிலாந்து.
ஜெ.பிரகாஷ்