நான்காவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதை தொடர்ந்து நான்காவது டி20 போட்டி நேற்று (ஆகஸ்ட் 6) இரவு நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் (33), சூர்யகுமார் யாதவும் (24) சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். அடுத்து வந்த தீபக் ஹூடா 21 ரன்களும், ரிஷப் பண்ட் 44 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். சஞ்சு சாம்சன் 30 ரன்களும், கடைசியில் அக்சர் படேல் அதிரடியுடன் 20 ரன்களையும் எடுத்தனர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.
தொடக்கம் முதலே தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லாத அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பவல் தலா 24 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இதனால், 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இதே மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 7) இரவு நடைபெறுகிறது.
-ராஜ்